20 குழந்தைகளின் உயிர்களைப் பறித்த இருமல் மருந்து: நிறுவனத்தின் உரிமையாளர் கைது!
கோல்ட்ரிப் மருந்து குடித்து மத்திய பிரதேசத்தில் 20 குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில், அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருமல் மருந்து குடித்த குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கோல்ட்ரிப் இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மத்திய பிரதேசத்தில் மட்டும் நேற்றுவரை 20 குழந்தைகள் இறந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமான நிலையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. நச்சுத்தன்மை கொண்ட கோல்ட்ரிப் இருமல் சிரப்பை உட்கொண்டதால் ஏற்பட்ட சிறுநீரக செயலிழப்பு காரணமாக குழந்தைகள் இறந்ததாக தெரியவந்து உள்ளது.
இறப்புகளுக்குக் காரணமான கோல்ட்ரிப் சிரப் தமிழ்நாட்டின் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த ‘ஸ்ரீசன் பார்மா' நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதனையடுத்து கோல்ட்ரிப் இருமல் சிரப்பை தயாரிக்கும் நிறுவனத்தின் உரிமையாளரைக் கைது செய்ய சிந்த்வாராவைச் சேர்ந்த ஒரு போலீஸ் குழு, தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்திற்கு விரைந்தது.
இந்த நிலையில், இருமல் மருந்து சாப்பிட்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் கோல்ட்ரிப் நிறுவனத்தின் உரிமையாளர் ரங்கநாதனை ம.பி. போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். சென்னை அசோக் நகரில் உள்ள வீட்டில் இருந்தவரை கைது செய்த போலீசார் சுங்குவார்சத்திரம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோல்ட்ரிப் மருந்து, தமிழகத்தில், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்கள் சில்லறை மற்றும் மொத்த விற்பனையகங்களில் இருக்கலாம் எனக்கூறப்படுகிறது. அந்த மருந்துகளை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், அவற்றை பறிமுதல் செய்து, சென்னையில் உள்ள தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கும்படி, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் அந்த நிறுவனத்தின் மருந்து தயாரிப்புக்கான உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட உள்ளது. இதில், சம்பந்தப்பட்டவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.