இராமேசுவரத்தில் மீனவர்கள் தொழில்நிறுத்தம்
இராமேசுவரத்தில் மீனவர்கள் தொழில்நிறுத்தம்

நாட்டுப் படகு மீனவரும்தான்... பாலகிருஷ்ணன் பகீர்!

இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிச் சென்று இழுவைப்படகு மூலம் மீன்வளத்தை அழிப்பதாக தமிழக மீனவர்கள் மீது இலங்கைத் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டின்படிதான் தமிழக மீனவர்களைக் கைதுசெய்து, அவர்கள் பயன்படுத்திய படகுகளையும் இலங்கைப் படை கைப்பற்றி வைத்திருக்கிறது.

இந்த நிலையில், பாரம்பரிய முறையில் மீன்பிடிக்கச் சென்றவர்களையும் இலங்கைப் படை அண்மையில் கைதுசெய்துள்ளது. ஆனால், அவர்களை விடுவிப்பதில் மைய அரசு அக்கறை காட்டவில்லை என சி.பி.எம். கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அதிர்ச்சிக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

”தனுஷ்கோடியிலிருந்து கடலில் நாட்டுப்படகில் பாரம்பரிய முறையில் மீன் பிடிக்கச் சென்ற 24 மீனவர்களையும், 4 நாட்டுப்படகுகளையும் கச்சத்தீவுக்கும் அருகே இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ஓராண்டில் மட்டும் இரு நூறுக்கும்  மேலான மீனவர்களையும் 28 படகுகளையும்  பிடித்துவைத்துள்ள இலங்கை கடற்படையின் தொடரும் இந்த அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இதுவரை இழுவலையை பயன்படுத்தி வந்த மீனவர்களை தங்கள்நாட்டு மீன்பிடித் தொழில் பாதிக்கப்படுவதாகக் கூறி  கைதுசெய்துவந்த இலங்கை கடற்படை, தற்போது வழி வலையைப் பயன்படுத்தி  பாரம்பரிய  முறையில்  மீன்பிடித்  தொழிலில்  ஈடுபட்ட நாட்டுப் படகு மீனவர்களையும், படகுகளையும் கைது செய்து அட்டூழியம் செய்துள்ளது.

                2014 ஜூன் மாதத்தில் மட்டும் இது போன்ற கைது நடவடிக்கைகளில் சுமார் 50 மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஜூன் 17 அன்று, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டினத்தை சேர்ந்த நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. ஜூன் 22 ஆம் தேதி ராமேஸ்வரத்தை சேர்ந்த 22 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டனர். ஒரு வாரம் முன்பு நாகை மாவட்டத்தை சேர்ந்த 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். இப்போது, ஜூன் 30 அன்று மீண்டும் 24 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு, படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் மட்டும் இலங்கை கடற்படையினரால் 214 மீனவர்கள் கைது செய்யப்பட்டும், 28 படகுகள் கைப்பற்றப்பட்டிருப்பதையும் இலங்கை அரசின் செய்திக் குறிப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

இவ்வாறு, நடைபெறும் தொடர் கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தில் விழும் பேரிடியாகும். தேர்தல் நேரத்தில் மட்டும் மீனவர் பிரச்சனையை பற்றி ஜம்பமாக பேசி வந்த பாஜக, தனது அதிகாரத்தை வைத்து மீனவர்களை காக்க துரும்பையும் கிள்ளியதில்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் பாதிக்கப்படும் போதெல்லாம் கள்ள மௌனம் சாதித்து கடந்துவிட நினைக்கிறது. அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் இப்பிரச்சனையை குறிப்பிட்டு எழுதிய கடிதத்திற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் பதில் கொடுத்தார். அதில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். ஆனாலும், இலங்கை அரசின் கைது நடவடிக்கைகளோ, படகுகள் சிறைப்பிடித்தலோ நிற்கவே இல்லை.

இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. இந்திய அரசாங்கம் உறுதியான நிலை எடுத்து, தமிழ்நாட்டு மீனவர்களின் மீன் பிடி உரிமையையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும்.” என்று பாலகிருஷ்ணனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com