சண்முகையா  – வடக்குத்தியாள்
சண்முகையா – வடக்குத்தியாள்

டார்ச் லைட் அடித்து... தண்டவாளத்தில் ஓடி... உயிரைப் பணயம் வைத்து பலரைக் காப்பாற்றிய தம்பதி!

எவ்வளவு பெரிய விபத்தையும் பார்த்து கடந்துபோகும் இந்த காலத்தில், தங்களின் உயிரையே பணயம் வைத்து பல நூறு பயணிகளின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர் தென்காசியை சேர்ந்த அந்த வயதான தம்பதிகள்.

கரிசனத்தோடும் சமயோசித புத்தியோடும் செயல்பட்டிருக்கும் சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதிகளுக்கு பலரும் பாராட்டு தெரிவிக்கும் நிலையில், அவர்களுக்கு ரூ. 5 லட்சம் வெகுமதி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

கடந்த ஞாயிற்றுக் கிழமை கேரளாவில் இருந்து பிளைவுட் ஏற்றி வந்த லாரி ஒன்று தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தது. இரவு சுமார் 12.50 மணி அளவில் தமிழக - கேரள எல்லைப்பகுதியான செங்கோட்டை அருகே புளியரை பகுதியில் சென்று கொண்டிருந்த போது,  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தடுப்பு கம்பிகளை தாண்டி 50 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது. அப்படி கவிழ்ந்த லாரி பகவதிபுரம் - ஆரியங்காவு ரயில் நிலையங்களுக்கு இடையேயுள்ள தண்டவாளத்தில் குப்புற கவிழ்ந்துள்ளது.

லாரி விழுந்த சத்தம் கேட்டும், அருகாமையில் வசித்து வரும் சண்முகையா (60) – வடக்குத்தியாள் (49) தம்பதியினர் ஓடிவந்து பார்த்துள்ளனர். லாரி ஓட்டுநர் உயிரிழந்து கிடக்க, நெல்லையில் இருந்து செங்கோட்டை வழியாக பாலக்காடு செல்லும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டிருக்கும் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கவிழ்ந்துகிடக்கும் லாரி மீது ரயில் மோதினால் என்னவாகும் என்பதை நினைத்து அஞ்சிய தம்பதிகள், உடனடியாக ரயில்வே அதிகாரி ஒருவருக்கு தொடர்பு கொண்டுள்ளனர். அவர் அழைப்பை எடுக்காததால், கொஞ்சமும் தாமதிக்காமல் தம்பதிகள் இருவரும், ரயிலை நிறுத்துவதுக்குத் தண்டவாளத்தில் ஓடியுள்ளனர். தங்கள் கையில் வைத்திருந்த வைத்திருந்த டார்ச் லைட்டை ரயில் வரும் திசையை நோக்கி அடித்துக் கொண்டே ஓடியுள்ளனர். அந்த வெளிச்சத்தைப் பார்த்த ஓட்டுநரும், ஆபத்து ஏதாவது இருக்கலாம் என்பதை உணர்ந்து, ரயிலை காலி தண்டவாளத்தில் நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இவ்வளவு பெரிய ரயில் விபத்தை தடுத்து தம்பதிகளை கௌரவிக்க வேண்டும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.

தற்போது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதிகளுக்கு ஐந்து லட்சம் வெகுமதி வழங்க உத்தரவிட்டுள்ளதோடு, அவர்களுக்குப் பாராட்டும் தெரிவித்துள்ளார்.

வறுமை தம்பதிகள்

சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதிகள் ரப்பர் பண்ணையில் வேலைப் பார்த்து வந்துள்ளனர். அவர்கள் கடந்து இருபது வருடங்களாக ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் தகர சீட் போட்ட வீட்டில் வசித்து வருகின்றனர்.

மிக வறுமையான சூழலில் வாழ்ந்து வரும் அந்த தம்பதிகள் ரேஷன் பொருட்களை நம்பியே வாழ்வை கழித்து வரும் நிலையில், மகளிர் உரிமை தொகைக்கு வடக்குத்தியாள் இரண்டு முறை விண்ணப்பித்திருக்கிறார். இரண்டு முறையும் அவரின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com