தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சியில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களை காவல்துறை உதவியுடன் தமிழக அரசு சென்னை ரிப்பன் பில்டிங் முன்பிருந்து அப்புறப்படுத்தியது.
இதற்கிடையே தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுரேந்தர், சென்னை மாநகராட்சியின் இரண்டு மண்டலங்களில் தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கும் தீர்மானத்தை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
இதை எதிர்த்து உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில், ‘தூய்மை பணிகளை தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கு தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று வாதம் முன்வைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி சார்பில், ‘தனி நீதிபதி உத்தரவின் அடிப்படையில் தொழிலாளர் நல நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடியும் வரை தற்காலிகமாக தூய்மை பணியாளர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட 761 ரூபாய் ஊதியத்தை தொடர்ந்து வழங்க ஒப்பந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஒப்பந்த நிறுவனம் சார்பில், ‘தனி நீதிபதியின் உத்தரவுக்கு பிறகு 800 பணியாளர்கள் பணியில் சேர்ந்தனர். மேல் முறையீடு செய்ததை அடுத்து அவர்கள் பணிக்கு வர மறுக்கின்றனர். இதனால் 2000 டன் குப்பைகள் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இனியும் அவர்கள் பணிக்கு வராவிட்டால் வேறு ஆட்களை நியமிக்க வேண்டி வரும். எனவே தூய்மை பணியாளர்களை பணிக்கு திரும்ப அறிவுறுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் நாங்கள் எந்த இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க போவதில்லை. இந்த மனு தொடர்பாக அக்டோபர் 6ஆம் தேதிக்குள் சென்னை மாநகராட்சியும் ஒப்பந்த நிறுவனமும் பதிலளிக்க வேண்டும்.
தூய்மை பணியாளர்களை பணிக்கு திரும்ப மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் அறிவுறுத்த வேண்டும்’ என்று உத்தரவு பிறப்பித்தனர்.