அரசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்தத் தவறிய மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, நாளை சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
முன்னதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இதுகுறித்து வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது :
"அரிசி, பருப்பு, சர்க்கரை உட்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் கிலோ ரூ.48-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சர்க்கரை விலை, தற்பொழுது 70 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
எத்தனால் தயாரிப்பிற்காக அதிக அளவில் கரும்பு பயன்படுத்தப்படுவதால் சர்க்கரை உற்பத்தி குறைந்து அதனால் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
பெட்ரோலில் 20 விழுக்காடு எத்தனால் கலக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கொள்கையே இதற்கு முக்கியக் காரணம் என கூறப்படுகிறது.
சர்க்கரை விலை உயர்வால் டீ, காபி விலை மீண்டும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கெனவே, வணிக நிறுவனங்களுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்த்தப்பட்டது. அதன் காரணமாக சாலையோர தேநீர்க் கடைகளில்கூட, டீ விலை15 ரூபாய் வரை உயர்ந்தது. காபி விலை ரூ. 20 வரை உயர்ந்தது .
தற்போது அரிசி விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. கர்நாடகத்தில் ஏற்பட்ட விளைச்சல் பாதிப்பு, தமிழகத்தில் குறுவை சாகுபடி பாதிப்பு உட்பட்ட காரணங்களால் பொன்னி அரிசி ரூபாய் 80க்கு விற்பனை ஆகிறது. இட்லி அரிசி ரூபாய் 35 வரை அதிகரித்துள்ளது.
அதேபோல் பருப்பு வகைகளும் விலை உயர்ந்துள்ளன. உளுத்தம் பருப்பு கிலோ ரூபாய் 120 லிருந்து 150 ஆகவும், கடலைப் பருப்பு 80 லிருந்து 100 ஆகவும், தனியா 160 லிருந்து ரூ250 ஆகவும் விலை உயர்ந்துள்ளது.
இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் நியாய விலைக் கடைகள் மூலமாக குறைந்த விலையில் மக்களுக்கு வழங்க வேண்டும்.
ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக அரிசி, பருப்பு, சர்க்கரை போன்ற அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கிட வேண்டும்." என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.