நிவாரணம்- மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் அறிவிப்பு!

நிவாரணம்- மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் அறிவிப்பு!

தமிழ்நாட்டிற்கு பேரிடர் நிவாரண நிதி முழுமையாக வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அடுத்தடுத்து போராட்டம் அறிவித்துள்ளது.

மிக்ஜம் புயல் மழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து கடந்த 18ஆம் தேதி தென் தமிழ்நாட்டில் பெய்த மழையால் திருநெல்வேலி, தூத்துக்குடி, மாவட்டங்களும் வெள்ள நீரில் தத்தளித்தன.

இந்த மழை வெள்ள பாதிப்பை கருத்தில் கொண்டு, தேசிய பேரிடராக அறிவித்து தமிழ்நாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என்றார்.

இதனைத் தொடர்ந்து, நெல்லை, தூத்துக்குடியில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு மேற்கொண்டார். அவரிடம், தேவையான நிவாரணம் குறித்தும் அமைச்சர் தங்கம் தென்னரசு 78 பக்க ஆய்வு அறிக்கையை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு முழுமையான நிவாரணம் வழங்க வலியுறித்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் அடுத்தடுத்து போராட்டம் அறிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

மக்கள் அனைத்தையும் இழந்து ஆதரவற்ற நிலையில் தவித்துக் கொண்டிருக்கும்போது தமிழக அரசின் நிவாரண பணிகள் மற்றும் வழங்கி வரும் நிவாரணத் தொகைகள் ஓரளவு ஆறுதலை தருகின்றன. ஆனால், இப்பேரிடரில் தவிக்கும் மக்களை காப்பாற்ற ஆதரவு கரம் நீட்ட ஒன்றிய அரசு இதுவரை முன்வரவில்லை. தமிழக முதலமைச்சர் புயல் மற்றும் வெள்ள நிவாரணத்திற்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கிட வேண்டுமென்று பிரதமரை சந்தித்து நேரில் வற்புறுத்தியபோதும், இதுவரை ஒரு ரூபாய் கூட நிவாரணம் வழங்கவில்லை என்பது ஒன்றிய அரசின் பழிவாங்கும் போக்கை காட்டுகிறது. நிதியை வழங்க மறுக்கும் ஒன்றிய அரசு மறுபக்கம் தமிழக அரசையும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களையும் கொச்சைப்படுத்தும் வகையில் அவதூறு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.

வரலாறு காணாத புயல், தொடர் மழை, வெள்ள பாதிப்பிற்கு பேரிடர் நிவாரண நிதியாக தமிழக அரசு கேட்ட 21 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வற்புறுத்தி 2024 ஜனவரி 3 அன்று சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரி பவனை முற்றுகையிடும் போராட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாடு முதலமைச்சர் கோரியுள்ள ரூபாய் 21 ஆயிரத்து 692 கோடியை முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழ்நாடு அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு பேசி, தமிழ்நாட்டு மக்களை அவமதிக்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதை வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்குவதாக அமைந்துள்ளது.

மத்தியக் குழு விரிவாக பயணம் செய்து, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளது. ஒன்றிய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் பார்வையிட்டு சென்றுள்ளார். தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி, முதலமைச்சரிடம் உறுதியளித்துள்ளார். இவ்வளவுக்கும் பிறகு இதுவரை தமிழகம் சந்தித்த இயற்கை சீற்றப் பேரழிவை எதிர்கொள்ளப் பேரிடர் நிவாரண நிதி வழங்காத ஒன்றிய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கவும் வலியுறுத்தி 08.01.2024 திங்கள் கிழமை தமிழ்நாடு முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

logo
Andhimazhai
www.andhimazhai.com