அவசர கோலத்தில் தொகுதி மறுவரையறையா?- சி.பி.ஐ. கண்டனம்

பாலன் இல்லம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
பாலன் இல்லம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம்
Published on

அவசர கோலத்தில் தொகுதி மறு வரையறை செய்வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனமும் தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் மாநிலச் செயற்குழு சார்பில் செயலாளர் மு.வீரபாண்டியன் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், இதை வலியுறுத்தியுள்ளார். 

”இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல்கள்  நடக்கின்றன.

அசாம், புதுச்சேரி, கேரளா மாநிலங்களுக்கு வாக்குப்பதிவு முடிந்து விட்டது.

அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தொகுதி மறுவரையறையை ஒன்றிய அரசு அவசர,அவசமாக கொண்டுவர முயல்கிறது. ஒன்றிய அரசின் இந்த ஜனநாயக விரோதப் போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் நாடாளுமன்றத்தில் தென்னிந்தியாவின் குரல்வளையை நசுக்குவதற்கு ஒன்றிய அரசு முயல்கிறது.

பாஜக வலிமையாக உள்ள வடமாநிலங்களில் தொகுதியை அதிகப்படுத்தி , ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரத்தை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள ஒன்றிய மோடி அரசு அவசரம் காட்டுகிறது.

இதன் மூலம் தனது இந்துத்துவ மதவெறி அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள திட்டமிடுகிறது. இந்தியாவை இந்துராஷ்டிராவாக மாற்றுவதற்கான ,சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கான சூழ்ச்சி இதில் அடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு ,கேரளம் போன்ற  மாநிலங்களின் மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு போதிய நேரத்தை   ஒன்றிய பாஜக  அரசு ஒதுக்குவதில்லை. தொகுதி மறுவரைக்குக் பிறகு தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதிகள் குறையும் பொழுது , இது மேலும் அதிகரிக்கும்.

தொகுதி மறுவரையறைக்கான அடிப்படையாகக் கொள்ளப்போவது எது என்பதிலும் கொஞ்சம் கூட வெளிப்படைத்தன்மை இல்லை.

2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் ,தொகுதி மறுவரையறை  செய்யப் போகிறார்களா அல்லது  1971-ஆம் ஆண்டு எண்ணிக்கையின் அடிப்படையில் செய்யப் போகிறார்களா? என்ற  கேள்விக்கும் தெளிவான பதில் இல்லை.

2021 ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் ,தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், வடமாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை இரட்டிப்பாகிவிடும்.

தென்மாநிலங்களின் தொகுதி எண்ணிக்கை  24 விழுக்காடாக தேங்கிவிடும்.

இது தென்இந்திய மாநிலங்களின் ஜனநாயகக் குரலை நெரிக்கும் செயலாக அமையும். மாநிலங்களிடையே சமத்துவமின்மை அதிகரிக்கும்.

மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப் படுத்தியதற்காக, தமிழ்நாடு,

கேரளம்,கர்நாடகம்,ஆந்திரா,தெலங்கானா போன்ற மாநிலங்களை தண்டிப்பதாக அமைந்துவிடும்.

இந்தியாவின் பன்முகத்தன்மையை, கூட்டாட்சி முறையை , அரசியல் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை இத்தொகுதி மறுவரை  சீர்குலைக்கும்.

ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்கும் நேரத்தில், கட்டாயமாக இந்தத் திட்டத்தை ஒன்றிய அரசு திணிக்கிறது.

தென்னிந்தியாவில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்யும் பாஜக விற்கு,ஏமாற்றம் தான் மிஞ்சியது.  பாஜக ,ஆர்எஸ்எஸ் சின் மதவெறி அரசியல்  தென்மாநிலங்களில் எடுபட வில்லை. இனியும் எடுபடாது. எனவேதான் தொகுதி மறுவரையறை மூலம் தென்மாநில மக்களை ஒன்றிய பாஜக அரசு வஞ்சிக்கிறது. நாட்டின் ஜனநாயகம்,மதச்சார்பின்மை,

அரசியல் சட்டம் ஆகியவற்றை காப்பதில் உறுதியோடு முன்னணியில் இருக்கும் இம்மாநிலங்களின் ஜனநாயக வலிமையை ஒன்றிய பாஜக அரசு தகர்க்கிறது.

இத்தகைய முயற்சியை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும்.தென்னிந்திய மாநிலங்களின் உரிமைகளையும்,நாட்டின் ஜனநாயகத்தையும் பாதுகாக்க அனைத்து இடதுசாரி ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளும் ஓரணியாய் திரள வேண்டும்.” என்று வீரபாண்டியன் கூறியுள்ளார்.   

logo
Andhimazhai
www.andhimazhai.com