இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான நல்லகண்ணுவின் உடல்நிலை தொடர்பாக யாரும் தவறான தகவல்களைப் பரப்பவேண்டாம் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.
மருத்துவமனை வளாகத்தில் இன்று காலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ தோழர் நல்லகண்ணு தீவிர சிகிச்சையில் இருக்கிறார். இயற்கையோடு போராடுகிறார். தொடர்ந்து மருத்துவர்கள் அவரைக் கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையில் வெளிவரும் தகவல்கள் உண்மை அல்ல். மருத்துவமனையின் அறிக்கை வெளியான பிறகு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரபூர்வமாக தகவலை வெளியிடும். அதுவரை எத்தகைய தகவல்களையும் யாரும் நம்பவேண்டாம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு சார்பில் கேட்டுக்கொள்கிறோம். தமிழ் மக்களின் அன்பு அனைவரும் அறிந்தது. மிகச் சிறந்த மருத்துவர்கள் தங்களின் சக்தி, திறன் முழுவதையும் செலுத்தி போராடிவருகிறார்கள்.” என்று கூறினார்.