
சென்னைக்குக் குடிநீரை வழங்கும் புழல் ஏரியின் தூய்மையை உறுதி செய்ய வேண்டும்; மாசுபாடுகளை அகற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் உள்ள புழல் ஏரி சென்னை பெரு மாநகர மக்களின் முதன்மையான குடிநீர் ஆதாரமாகும். இதன் மொத்தக் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடியாகும்.
ஆந்திராவில் இருந்து பெறப்படும் கிருஷ்ணா நதி நீரும், பூண்டி, சோழவரம் ஏரிகளிலிருந்து வரும் தண்ணீரும் புழல் ஏரியில் சேமிக்கப்படுகிறது. இந்த ஏரி சுமார் 4,500 முதல் 5,200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஆங்கிலேயர் கால ஆட்சியில் சிறிய நீர்த்தேக்கமாக உருவாக்கப்பட்டு, 1997-ல் இதன் கொள்ளளவு விரிவாக்கம் செய்யப்பட்டது.
தற்பொழுது புழல் ஏரி முறையாக பராமரிக்கப்படாமல், மாசுபட்டும், அசுத்தங்கள் நிறைந்தும் காணப்படுவது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.
புழலேரியில் கழிவு நீர் கலக்கிறது. இதன் கரையின் உட்பகுதியையும், அதன் வெளிப்புறத்தையும், இப்பகுதிப் பொதுமக்கள் திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்தி வருகின்றனர்.
கால்நடைகள் தாராளமாக எந்த தடையுமின்றி வந்து செல்கின்றன. அவற்றின் கழிவுகளும் ஏரியில் கலக்கின்றன.
சுகாதாரமற்ற இந்தத் தண்ணீர் தான் சென்னைக்கும், இந்த ஏரியைச் சுற்றியுள்ள ஒரகடம், செங்குன்றம், அம்பத்தூர், திருமுல்லைவாயில், அரிக்கைமேடு, பொத்தூர், பம்மதுகுளம், ஆட்டுத்தாங்கல் போன்ற பகுதிகளுக்கும் குடிநீர் ஆதாரமாக அமைந்துள்ளது.
இந்த புழல் ஏரியும், அது அமைந்துள்ள பகுதியின் பொதுமக்களும், சென்னைப் பெரு மாநகர மக்களும் கேட்டுக்கொண்டதன் பேரில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், நேற்று புழல் ஏரியைச் சுற்றிப் பார்த்தார்.
பொது மக்களுடைய புகாரும், பதற்றமும் உண்மை என்பதை நேரில் கண்டறிந்தார்.
”தமிழ்நாடு அரசு புழல் ஏரியில் நிலவும் சுகாதாரக் கேடுகளை அகற்றவும், ஏரியின் தூய்மையை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் பொறுப்புகளை கவனிக்கும் முதலமைச்சர் விஜய், புழல் ஏரி சுகாதாரத்தையும், அங்கு தேக்கப்படும் தண்ணீரின் தூய்மையினையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று வீரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.