பிஎம்ஸ்ரீ திட்டத்தை விஜய் எதிர்க்க வேண்டும்- மு.வீரபாண்டியன்

சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன்
Published on

மொழித் திணிப்பு உள்ளடக்கம் கொண்ட பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழக அரசு எதிர்க்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

அக்ட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு,  மாநிலக் குழுக் கூட்டங்கள் 2026 மே 14, 15, 16 தேதிகளில் திருவாரூர் நகரில் நடைபெற்றது.

கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் டி.ராஜா, மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மூத்த தலைவர்கள் இரா.முத்தரசன், கோ.பழனிசாமி, தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் டி. எம் மூர்த்தி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கே.சுப்பராயன் எம்.பி., வை.செல்வராசு எம்.பி., துணைச் செயலாளர்கள் நா.பெரியசாமி, எம்.ரவி, சட்டமன்ற உறுப்பினர் க.மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி), மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.பத்மாவதி, டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், எம்.செல்வராஜ், வை.சிவபுண்ணியம், தி.ராமசாமி, வஹிதா நிஜாம் உள்பட மாநிலக் குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இதில் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானத்தில் , ”பாஜகவின் ஒன்றிய அரசு “இந்துத்துவா” கருத்தியலையும், சமஸ்கிருதம், இந்தி மொழித் திணிப்பையும் உள்ளடக்கமாகக் கொண்ட பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்த்து வருகிறது. இத்திட்டத்தை ஏற்க வேண்டும் என நிர்பந்தித்து வரும் ஒன்றிய அரசு, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு நிதியை வழங்க மறுத்து விட்டது. மாநில அரசின் சொந்த நிதிப் பொறுப்பில் கல்வித்துறை பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் ஒன்றிய அரசு சென்ற 07.05.2025 ஆம் தேதி பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏற்று கையெழுத்து போட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. புதிதாக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை உறுதியுடன் நிராகரிக்க வேண்டும்.” என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com