தி.மு.க.வுடன் சி.பி.எம்., ம.தி.மு.க. தொகுதிப் பேச்சுவார்த்தை!

தி.மு.க.வுடன் சி.பி.எம்., ம.தி.மு.க. தொகுதிப் பேச்சுவார்த்தை!

நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி தி.மு.க.-வுடன் சி.பி.எம்., ம.தி.மு.க. ஆகிய கட்சிகள் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தின.

மக்களவைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல் கட்டமாக காங்கிரஸ் கட்சியுடன் தி.மு.க. சார்பில் கடந்த 28ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தியது.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய கட்சிகளுடன் தி.மு.க. இன்று பேச்சுவார்த்தை நடத்தியது.

முதலில், சி.பி.எம். கட்சியுடன் நடந்த தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையில், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச்செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி, ஆ. ராசா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் மத்தியக் குழு உறுப்பினர் சம்பத், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த சி.பி.எம். மத்தியக் குழு உறுப்பினர் சம்பத், ”தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றது. இரு தரப்பினரும் மனம் திறந்து தங்களுடைய கருத்துகளைப் பகிர்ந்துகொண்டோம்.

கடந்த முறைய விட கூடதலான் இடங்களில் போட்டியிட எங்களது கோரிக்கையை முன்வைத்தோம். தகுந்த நேரத்தில் விருப்பப் பட்டியலைக் கொடுப்போம். இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஒப்பந்தம் கையெழுத்தானால் மிகவும் நல்லது” என்றார்.

அதனைத் தொடர்ந்து, ம.தி.மு.க.வுடன் தி.மு.க.பேச்சுவார்த்தை நடத்தியது.

ம.தி.மு.க. சார்பில் ஆடிட்டர் அர்ஜூனராஜ், செந்திலதிபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அர்ஜூன்ராஜ், " பேச்சுவார்த்தை திருப்திகரமாக இருந்தது. நாங்கள் இரண்டு மக்களவை சீட்டும், ஒரு மாநிலங்களவை சீட்டும் கேட்டிருக்கிறோம். இந்த முறை எங்களுடைய கட்சி சின்னத்தில் தான் கண்டிப்பாக போட்டியிடுவோம்.” என்றார்.

அதேபோல், நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. உடன் தொகுதி பங்கீடு தொடர்பாக விசிக பிப்ரவரி 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com