இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2026 ஜூன் 9, 10 தேதிகளில் தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பி.வி.ராகவலு, கே.பாலகிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி.சம்பத், என்.குணசேகரன், கே.பாலபாரதி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பின்வருமாறு..
விலைவாசி உயர்வு - நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்பு - நூறுநாள் வேலைத் திட்டத்தில் திருத்தம் ஆகியவற்றை கைவிட வலியுறுத்தி சிபிஐ(எம்) ஜூன் 19 அன்று ஆர்ப்பாட்டம் !
ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் முடியும்வரை காத்திருந்த ஒன்றிய பாஜக அரசு, தேர்தல் முடிவுகள் வெளிவந்தபின் ஐந்து முறை பெட்ரோல்-டீசல் விலையை உயர்த்தியுள்ளது. சமையல் எரிவாயு மற்றும் வணிக சிலிண்டர்களின் விலையையும் இரண்டு முறை உயர்த்தி உள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக இதர அத்தியாவசிய பொருட்கள் மீதான விலையை உயர்த்திட வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் போர்வெறி காரணமாக, ஈரான் எண்ணெய் உற்பத்தி, ஹோர்மூஸ் நீரிணை மூலமாக உலக நாடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் பெட்ரோலியப் பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் இந்த போர்வெறியை கண்டிக்காத மோடி தலைமையிலான அரசு, இந்திய மக்கள் மீதான சுமையை ஏற்றி வருகிறது. இது வன்மையான கண்டனத்திற்கு உரியது. இதுகுறித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மற்றும் இடதுசாரி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் இரண்டு முறை கண்டன இயக்கம் நடத்தி உள்ளோம்.
மேற்படி பெட்ரோலிய தட்டுப்பாடு உலக அளவில் உரத்தட்டுப்பாட்டை நோக்கி தள்ளி விடும் அபாயம் உள்ளது. அது ஒட்டுமொத்த உணவு உற்பத்தி விநியோகம் ஆகிய உணவு சங்கிலியை கடுமையாக பாதிக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சுட்டிக்காட்டுகிறது. இதற்கு எதிரான போராட்டத்தையும் நடத்த வேண்டியுள்ளது.
மேலும், தொழிலாளர்களுக்கு எதிரான நான்கு சட்டத் தொகுப்புகள் அமலாக்கத்தை பாஜக அரசு கைவிட வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்தி வருகிறது. கார்ப்பரேட் நிறுவனங்களின் கொள்ளை லாபம், கதவடைப்புக்கான வாய்ப்பு போன்றவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த சட்ட தொகுப்புகள் அமலாக்கப்பட்டுள்ளது. மறுபுறம், தொழிலாளர்கள் அனுபவித்து வரும் வேலை நிறுத்த உரிமை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளை பறித்து அடிமைகளாக மாற்றும் சூழலை உருவாக்கும். அதுமட்டுமல்ல, ஒப்பந்தம் உள்ளிட்ட நிரந்தரமற்ற தொழிலாளர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களின் எல்லையற்ற சுரண்டலை அதிகப்படுத்தும் வகையிலும், இந்த சட்டத் தொகுப்புகள் அமைந்துள்ளது. அண்மையில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் டெல்லி மற்றும் அதை சுற்றி உள்ள தேசிய தலைநகர் மண்டலத்தின் 82 இடங்களில் நடந்த போராட்டங்கள் குறிப்பிடத்தக்கது. எல்லையற்ற சுரண்டலை தொழிலாளர்கள் வலுவான எதிர்ப்பு போராட்டங்களுக்கு செல்வார்கள் என்பதை உணர்த்துகிறது.
மூன்றாவதாக, தேசிய கிராமப்புற வேலை உறுதிச் சட்டம் ‘விபி ஜி ராம் ஜி’ என திருத்தப்பட்டு கடந்த காலத்தில் அனுபவித்த உரிமைகளை இழக்கும் அபாயம் உள்ளது. ஏற்கனவே 90 சதவிகிதம் நிதியை ஒன்றிய அரசு பங்கிட்டு கொள்ளும் என்பதை 60:40 என ஒன்றிய அரசின் பங்கை குறைத்து, மாநில அரசின் பங்கை உயர்த்தி இருப்பது, வேலை உறுதிச் சட்டத்தின் நோக்கத்தை நீர்த்துப் போக செய்துள்ளது. 100 நாள் வேலையை 125 நாட்களாக உயர்த்தப் போவதாக பொய்யான வாக்குறுதி வழங்கி உள்ளது. தற்போது சராசரி வேலை நாட்களாக 35/22 தான் உள்ளது. இதற்கு காரணம் ஒன்றிய பாஜக அரசு நிதியை வெட்டி சுருக்கியது ஆகும். எனவே தான், பாஜக 125 நாட்கள் வேலை என பொய்யான பிரச்சாரம் செய்வதை கைவிட வேண்டும், வேலை நாள் 200 மற்றும் கூலியை ரூ. 700 என்கிற அளவிற்கு உயர்த்தி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தின் பலன் முழுமையாக கிராமப்புற உழைப்பாளிகளுக்கு கிடைக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வலியுறுத்துகிறது.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜூன் 19 அன்று தமிழ்நாடு முழுவதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தீர்மானித்துள்ளது.
கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.