தொடர் விடுமுறை காலத்தில் ஆம்னி பேருந்துகளில் பெரும் கட்டணக் கொள்ளை நடப்பதாக பா.ம.க., சி.பி.எம். உட்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“ குறிப்பாக நாகர்கோவில், தூத்துக்குடியிலிருந்து சென்னைக்கு வழக்கமாக ரூ. 1000 முதல் ரூ. 1500 வரை கட்டணமாக வசூலிக்கப்படும். ஆனால், இன்று ரூ. 4700 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. அதேபோன்று மதுரை, சேலம், பெங்களூர், கோவை, திருச்சி ஆகிய நகரங்களிலிருந்து பல மடங்கு கட்டணம் உயர்த்தப்பட்டு ரூ. 4500 முதல் ரூ. 5000 வரை வசூலிக்கப்பட்டு உள்ளது. இது ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மோட்டார் வாகன சட்ட விதிகளை மதிக்காமலும், சட்டத்திற்கு புறம்பாகவும் செயல்படுவதே முக்கிய காரணமாகும். இந்த கட்டண கொள்ளையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.” என்று சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், ”பண்டிகை காலங்கள், திருவிழாக்கள், தொடர் விடுமுறை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கட்டணக் கொள்ளை என்பது சர்வ சாதாரணமாக நடைபெற்று வருகிறது. இதனால் வெளியூரிலிருந்து சென்னை நகருக்கு வந்து வசிக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அதன் உரிமையாளர்கள் நிர்ணயிப்பதே இந்த கட்டண கொள்ளைக்கு முக்கிய காரணமாக உள்ளது. இந்த கட்டண கொள்ளையை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென நீதிமன்றங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்தும் உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளாததன் விளைவே இந்த தொடர் கட்டண கொள்ளைகளுக்கு காரணமாக அமைந்துள்ளது.” எனவே, பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆம்னி பேருந்துகளின் இந்த கட்டணக் கொள்ளையைத் தடுப்பதற்கும், ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அரசே நிர்ணயிப்பதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, கட்டண கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்றும் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், ”ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளை காலம் காலமாகவே தொடர்கிறது. அதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பல முறை ஆணையிட்டிருக்கிறது. "ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை அவற்றின் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அனுமதிப்பது சட்ட விரோதமானது. மோட்டார் வாகன சட்டத்தின் 67-ஆவது பிரிவின்படி ஆம்னி பேருந்து கட்டணத்தை தமிழக அரசு தான் நிர்ணயிக்க வேண்டும். கட்டணத்தை எவ்வாறு நிர்ணயிப்பது என்பது குறித்து அரசுக்கு பரிந்துரை அளிக்க உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 5 பேர் குழுவை அமைக்க வேண்டும்’’ என்று 2016-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், அந்தத் தீர்ப்பின் மீது 7 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை.” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
”ஆம்னி பேருந்துகளின் கட்டணக் கொள்ளையை தமிழக அரசு இனியும் அனுமதிக்கக்கூடாது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கருத்தில் கொண்டும் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகளின் கட்டணத்தை நிர்ணயிக்க தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையத்தை ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழக அரசு அமைக்க வேண்டும். ஆணையம் நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்யவும், லட்சக்கணக்கில் தண்டம் விதிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்றும் அவர் கூறியுள்ளார்.