ஜெம் வீரமணி வழக்கில் த.வெ.க. தோற்றம் காண்பிக்கிறது - பெ.சண்முகம்

P.Shanmugam, State secretary, CPI(M)
பெ.சண்முகம், சிபிஎம் மாநிலச் செயலாளர்
Published on: 

ஜெம் வீரமணி வழக்கில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெறும் அறிக்கையுடன் கடந்துவிட முடியாது என்று சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கான நீதியும் குற்றவாளிகளுக்கான தண்டனையும் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அவர் பேசியதாவது:

"ஜெம் வீரமணி வழக்கு தொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டார். தி.மு.க. ஆட்சியில் புகார் அளித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், மேல் விசாரணை செய்யப்படாதது ஏன்?

வீடியோ தெளிவாக இல்லை என்ற ஒற்றைக் காரணத்தைச் சொல்லி, இவ்வளவு பெரிய வழக்கை முடித்து வைக்க முடியுமா?

இந்த வழக்கில் அழுத்தம் கொடுத்தது யார்? இதற்கு காரணமான அதிகாரிகள் யார் ? என்பதற்கான பதில் எதுவும் அவருடைய அறிக்கையில் இல்லை.

கடந்த 2024 நவம்பர் மாதமே இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக காங்கிரஸ் கட்சி தலைவர் ஒருவர் புகார் கொடுத்திருக்கிறார். பின்னர் கடந்த 2025ஆம் ஆண்டு, இந்த வழக்கிற்காக அளிக்கப்பட்ட ஆதாரங்கள் தெளிவாக இல்லை என்று கூறி தி.மு.க. ஆட்சிக் காலத்தில் இந்த முடித்து வைக்க முயற்சி எடுக்கப்பட்டிருக்கிறது.

தன்னுடைய ஆட்சி காலத்தில் வலைப்பின்னல் போல இப்படி ஒரு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடந்ததற்கு தார்மீக முறையில் மு.க.ஸ்டாலின் பதில் சொல்வதே நேர்மையாக இருக்கும். மாறாக, 'எங்களுக்கு இதில் எந்த சம்மந்தமும் இல்லை' என்று கடந்து செல்வது சரியல்ல.

அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியில் அந்தந்த காலகட்டத்தில் இருந்த காவல்துறை அதிகாரிகள் இதை மூடி மறைத்திருக்கிறார்கள். பல கோடி ரூபாய் பணம் கைமாறப்பட்டுள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டு, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர வேண்டும். மற்ற வழக்குகளைப் போல இதையும் கிடப்பில் போட்டிவிடக் கூடாது.

ஜெம் வீரமணி வழக்கை த.வெ.க. அரசு வெளிக்கொண்டு வந்ததாகச் சொல்வது தவறு. இந்த வழக்கை த.வெ.க. அரசும் முடிக்கப் பார்த்தது.

கடந்த ஆகஸ்ட் 19ஆம் தேதி வழக்கு விசாரணையில், வழக்கு முடித்துவைப்பதாகவே த.வெ.க. அரசும் அறிக்கை அளித்துள்ளது. ஆனால், இதில் நீதிமன்றம் தலையிட்டதால்தான், பயந்து இதற்கு நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு த.வெ.க. அரசு தள்ளபட்டுள்ளது." என்று பெ. சண்முகம் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com