ராமதாசை கட்டித்தழுவும் பிரதமர் மோடி
ராமதாசை கட்டித்தழுவும் பிரதமர் மோடி

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன! – பிரதமர் மோடி விமர்சனம்

தமிழ்நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன என பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

கோவையில் நேற்று வாகனப் பேரணியில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று காலை கேரளாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். அங்கு தேர்தல் பிரச்சாரத்தை முடித்துவிட்டு, சேலம் வந்த பிரதமர் மோடி, கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:

பேசிய பிரதமர் மோடி, “தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கும் எனக்கும் கிடைத்துக் கொண்டிருக்கும் ஆதரவு குறித்துத்தான் நாடு முழுக்க பேசப்படுகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், பா.ஜ.க-வுக்கும் கிடைக்கும் ஆதரவைப் பார்த்து தி.மு.க-வின் தூக்கமே தொலைந்துவிட்டது. பா.ஜ.க-வுக்கு வாக்களிக்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர். இந்த முறை 400 இடங்கள் வெல்ல வேண்டும். ராமதாஸின் அனுபவம், அன்புமணியின் திறமை ஆகியவற்றைக் கொண்டு தமிழ்நாட்டை ஒரு புதிய உயரத்துக்குக் கொண்டு செல்ல உத்வேகம் கிடைத்திருக்கிறது. இன்று சேலத்தில் நான் கால் வைத்ததும், ஆடிட்டர் ரமேஷின் நினைவுகள் என்னை உறுத்தியது. கட்சிக்காக உயிரைக் கொடுத்து உழைத்தவர் ஆடிட்டர் ரமேஷ். அத்தகையவரை சமூக விரோதிகள் கொலை செய்துவிட்டனர்.

மும்பையில் இந்தியா கூட்டணி நடத்திய முதல் தேர்தல் பரப்புரையிலேயே அவர்களின் எண்ணம் தெரிந்துவிட்டது. இந்து மதத்தில் சக்தி என்பதற்கு மிகப்பெரிய பொருள் இருக்கிறது. தமிழ்நாட்டில் சக்திமிக்க தெய்வங்களெல்லாம் பெண் வடிவில் வணங்கப்படுகின்றன. ஆனால், காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி, இந்த சக்தியின் வடிவத்தை சனாதனத்தை அழித்துவிடுவோம் என்று கூறிவருகிறது. இந்தியா கூட்டணி வேண்டுமென்றே இந்து மதத்தை அவமதித்துக் கொண்டிருக்கிறது. இந்த மதத்துக்கு எதிரான கருத்தியலை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், வேறு எந்த மதத்துக்கு எதிராகவும் அவர்கள் பேசுவதே இல்லை.

இந்து மதத்தின் சக்தியை அழிக்க நினைத்தவர்கள்தான் அழிந்து போனார்கள் என்று நம் சாஸ்திரங்களிலேயே இருக்கிறது. ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டிலிருந்து உங்களால் அவர்களுக்கு அழிவு தொடங்கப் போகிறது. சுப்பிரமணிய பாரதியார் சக்தியை, பாரத அன்னை எனப் பெண் வடிவில் வணங்கினார். மோடி ஆகிய நானும் சக்தி உபாசகன். சக்தியின் அடையாளத்தை அழிக்க நினைப்பவர்களைத் தமிழ்நாடு தண்டிக்கும். தமிழ்நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் மலிந்து கிடக்கின்றன. எனவே, இந்தத் தேர்தலில் நீங்கள் வழங்கும் தீர்ப்பு தி.மு.க-வுக்கு வழங்கக்கூடிய பாடமாக இருக்க வேண்டும். தி.மு.க-வும் காங்கிரஸும் நாணயத்தின் இரு பக்கங்கள். ஒரு பக்கம் ஊழல், ஒரு பக்கம் குடும்ப ஆட்சி. ஆட்சியிலிருந்து காங்கிரஸ் தூக்கியெறியப்பட்ட பிறகு தற்போது இந்தியாவில் 5ஜி தொழில்நுட்பம் வளர்ந்து வருகிறது. அதுபோல தி.மு.க தமிழ்நாட்டில் தனியாக ஒரு 5ஜி-யை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதாவது தங்களின் ஐந்தாவது தலைமுறை ஆட்சிக்கு வர வேண்டும் என்று அவர்கள் ஆசைப்படுகிறார்கள். இதற்கு முன் அவர்கள் செய்தது 2ஜி ஊழல் மோசடி.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பல கோடிகள் அனுப்ப பா.ஜ.க தயாராக இருக்கிறது. ஆனால், இங்கிருக்கும் அரசு அதை எப்படிக் கொள்ளையடிக்கலாம் என்பதில் குறியாக இருக்கிறது. மேலும், தமிழராகிய மூப்பனாரை வளர விடாமல் செய்ததுதான் காங்கிரஸ் குடும்ப ஆட்சி. அடுத்துவரும் ஐந்தாண்டுகள் தமிழ்நாட்டுக்கு முக்கியமானவை. அதுமட்டுமல்லாமல் ஊழலுக்கெதிராக மிகக்கடுமையான நடவடிக்கைகளை நான் எடுக்கும் காலம் அது.

நம்மிடம் ஆயிரம் வருட கல் கிடைத்தால் அதை நாம் பெருமையாக சொல்லிக்கொள்வோம். ஆனால், நம் நாட்டில் என்று தோன்றியது என்றே தெரியாத அளவுக்கு காலத்துக்கு முந்தைய மூத்த தமிழ் மொழி நம்மிடம் இருக்கிறது. ஆனால், அதன் பெருமை யாருக்கும் தெரியவில்லை. நான் பெருமையோடு சொல்கிறேன், உலகத்திலேயே தொன்மையான மொழி என் நாட்டின் மொழி" என்று பிரதமர் மோடி பேசினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com