"திமுக ஆட்சியில் பட்டப்பகலில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளதாக” அதிமுக பொதுச்செயாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் அரசலங்குடி பகுதியில் போதையில் இருந்ததாகக் கூறப்படும் நபர்கள் சிலர் பள்ளிப் பேருந்தைத் தாக்கியதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அதேபோல், நாகை மாவட்டம் செல்லூர் கிழக்கு கடற்கரைச் சாலையில், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட வி.ஏ.ஓ ராஜாராமன் என்பவர் தலை மற்றும் முகத்தில் பலத்த காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதாகவும் செய்திகள் வருகின்றன.
ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், பட்டப்பகலில், நடுரோட்டில் சர்வ சாதாரணமாக குற்றச் செயல்கள் அரங்கேறுவது தொடர்கதையாகியுள்ளது.
பேருந்து மீதான தாக்குதலில் குழந்தைகளுக்கு ஏதாவது ஆகியிருந்தால் அதற்கு யார் பொறுப்பு? ஒரு பள்ளிப் பேருந்து கூட சாலையில் பாதுகாப்பாக செல்ல முடியாத அவல நிலைக்கு பொம்மை முதலமைச்சர் என்ன பதில் வைத்திருக்கிறார்?
யார், எங்கே, எப்போது சடலமாகக் கிடப்பார்கள்? என்று தெரியாத அவல நிலை தான் திமுக ஆட்சியின் "சட்டம்- ஒழுங்கு".
குற்றவாளிகளைப் பிடிக்கத் திணறுவது, பிடித்தாலும் அவர்களை சிறையில் வைத்திருக்க வக்கில்லாமல் வெளியே அனுப்பி, இன்னும் பலக் குற்றங்களை அவர்கள் செய்வதை கைகட்டி வேடிக்கைப் பார்ப்பது- இப்படி நடத்தப்படும் ஸ்டாலின் ஆட்சியைக் கண்டு எப்படி குற்றவாளிகளுக்கு பயம் வரும்?
குற்றவாளிகளை குஷியாக்கி, மக்களை பயத்தில் ஆழ்த்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீர்குலைத்த திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
மயிலாடுதுறை பள்ளிப் பேருந்து மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் மீதும், திருவாய்மூர் வி.ஏ.ஓ-வாக இருந்த ராஜாராமன் மரணத்தை விசாரித்து, அதில் தொடர்புள்ளோர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.