பெரியார் மீதான விமர்சனம்... சீமானுக்கு திருமா அறிவுரை!

விசிக தலைவர் தொல். திருமாவளவன்
விசிக தலைவர் தொல். திருமாவளவன்
Published on

“பெரியாரை நாங்கள் ஏற்க முடியாது என சொல்லிவிட்டு, திருமாவளவன் தான் எங்களுக்கு பெரியார் என சொல்வது அரசியல் உத்தி. அவர் சாதூரியமாக இந்த பிரச்னைய கையாளுகிறார்.” என விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.

பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வரும் நாதக தலைவர் சீமான், ”விசிக தலைவர் தொல். திருமாவளவனுக்கு வேண்டுமானால் ஈவேரா பெரியாராக இருக்கலாம். ஆனால் தமிழ் தேசிய பிள்ளைகளுக்கு வருங்கால தலைமுறைக்கு திருமாவளவன் தான் பெரியார்.” என்று நேற்று மயிலாடுதுறையில் பேசியிருந்தார்

இதற்கு இன்று பதிலளித்த திருமாவளவன், ”சீமான் என் மீது வைத்திருக்கும் மதிப்புக்கு நன்றி. பெரியாரை நாங்கள் ஏற்க முடியாது என சொல்லிவிட்டு, திருமாவளவன் தான் எங்களுக்கு பெரியார் என சொல்வது அரசியல் உத்தி. அவர் சாதூரியமாக இந்த பிரச்னைய கையாளுகிறார்.

அவர் பெரியார் வழி வந்தவர். பெரியார் மேடைகளிலும் விசிக மேடைகளிலும் பேசியவர். பெரியாரை வீழ்த்துவதற்காக அவரின் காலத்திலிருந்து போராடும் சக்திகள் யாரென்று சீமானுக்கு தெரியும். அவர்களின் நோக்கம் நிறைவேறுவதற்கு சீமானின் அரசியலில் சாதகமாக அமைந்துவிடக் கூடாது.

சீமானுக்கு திக, திமுகவிடம் முரண் இருக்கலாம். ஆனால், பெரியாரின் அரசியல் தன்னலமற்றது. அவரின் நிலைப்பாடுகளில் முன்னுக்கு பின் சில முரண்கள் இருக்கலாம். அவர் எல்லாவற்றையும் எளிய மக்களின் பார்வையிலிருந்துதான் பார்த்தவர். அதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

பெரியாரின் பங்களிப்பை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. கொச்சைப்படுத்தக் கூடாது என்பது எனது வேண்டுகோள்.

திக , திமுகவை விமர்சிக்கும் போது ஏன் திருமாவளவன் முந்திகொண்டு வருகிறார் என சிலர் கேட்கிறார்கள். திக, திமுக பேசுவது மட்டுமே  பெரியார் அரசியல் அல்ல; விசிக பேசுவதும் பெரியார் அரசியல் தான். அம்பேத்கரும் பெரியாரும் ஒரே நேர்கோட்டில் செயலாற்றியவர்கள். விசிக பேசும் அரசியலுக்கு தாக்குதல் நிகழும் என்றால் எப்படி கண்டும் காணாமல் இருக்க முடியும்? எங்களுக்கு தனிப்பட்ட முறையில் சீமான் மீது காழ்ப்பில்லை.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com