சேதமான நெல் பயிர்கள், திருவாரூர் மாவட்டம்
சேதமான நெல் பயிர்கள், திருவாரூர் மாவட்டம்

10 நாள்கள் மழையில் நாசமான பயிர்கள்; டெல்டாவில் கடும் பாதிப்பு- விவசாயிகள் கவலை!

”தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 நாள்களாக பரவலாக தொடர்ந்து கோடை மழை பெய்துவருகிறது. பல மாவட்டங்களில் குறிப்பிட்ட சில மணிநேரம் கன மழை பெய்துள்ளது. மாநிலம் முழுவதும் பெய்துவரும் தொடர் மழையால் பயிர்ச் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேதனை தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி நடராஜன் வெளியிட்ட அறிக்கையில், “ குறிப்பாக திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்ட பருத்திப் பயிர்கள் முதல் கட்டமாக எடுக்கும் நிலையில் இருந்த பருத்திப் பஞ்சு, சப்பைப் பூக்காய் என அனைத்தும் கீழே விழுந்துவிட்டன.

மழைத் தண்ணீர் தேங்கியதால் வேர்கள் அழுகி வருகிறது. தொடர் மழையால் பூச்சி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை கலசப்பாக்கம், போளூர், ஆரணி, செய்யார் உட்பட்ட வட்டராங்களில் ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர் சேதமாகியுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

சேதமான பருத்திச் செடிகள்
சேதமான பருத்திச் செடிகள்

மேலும், ”திண்டுக்கல் மாவட்டம் பழனி, சாணார்பட்டி ஆகிய ஒன்றியங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்கதிர்களில் சுமார் 800 ஏக்கர் தண்ணீரில் மூழ்கி கதிரிலேயே முளைத்துவிட்டது. ரெட்டியார் சத்திரம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டிருந்த மக்காச்சோளம் கதிர் வந்த நிலையில், கதிரில் முத்துக்கள் இல்லாமல் உள்ளது.


விருதுநகர் மாவட்டம் விருதுநகர் ஒன்றியப் பகுதிகளில் தொடர் மழையுடன் சூறைக்காற்றும் வீசியதால் நீண்ட கால சாகுபடியான கொடுக்காபுளி மரங்கள் சுமார் 500 மரங்கள் முறிந்து உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மாவட்டத்தில் பிரதான சாகுபடியாக உள்ள ரப்பர் மரங்களில் பால் எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. பால் வடிவதின் அளவு பெருமளவு குறைந்துள்ளது. இப்பணியில் ஈடுபடும் தொழிலாளர்களும் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.” என்றும் பாதிப்பு விவரிக்கப்பட்டுள்ளது.

எனவே, ”மாநிலம் முழுவதும் தொடர்ந்து பெய்துவரும் கோடை மழையினால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்திட தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசு வழங்கிட வேண்டும்.” என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com