“சிவி சண்முகம் ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர்.” என அமைச்சர் கீதா ஜீவன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய சி.வி.சண்முகம், இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு பலதரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக அமைச்சர் கீதா ஜீவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசின் இலவசத் திட்டங்களோடு பெண்களையும் ஒப்பிட்டு, அருவருக்கத்தக்கக் கருத்தை வெளியிட்டிருக்கிறார் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம். அதிமுக பூத் கமிட்டி பயிற்சிக் கூட்டத்தில் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சரும் மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகம், ”தேர்தலுக்குப் பல அறிவிப்புகள் வரும். இலவசமாக மிக்ஸி, கிரைண்டர், ஆடு, மாடு, ஏன் ஆளுக்கு ஒரு மனைவியையும் கூட இலவசமாக வழங்குவார்கள்” என மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்.
திராவிட மாடல் அரசு மக்களின் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. குறிப்பாக மகளிர் முன்னேற்றத்திற்காகப் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சொந்தக் காலில் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள மகளிர் விடியல் பயணம் திட்டம், கலைஞர் மகளிர் உரிமை திட்டம், புதுமைப் பெண் திட்டம், பணிபுரியும் மகளிர்க்கு தோழி விடுதிகள் திட்டம், சுய உதவி குழு மகளிருக்கு கடன் வரம்பை அதிகரிக்கும் திட்டம், மகளிரை தொழில் முனைவோர் ஆக்கும் திட்டம் போன்ற திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்தி வருகிறது.
‘பொண்டாட்டிகளையும் இலவசமாகத் தருவார்கள்’எனப் பெண்களை இலவசத்தோடு ஒப்பிட்டுக் கொச்சைப்படுத்தியிருக்கிறார் சி.வி.சண்முகம். அதிமுகவுக்குப் பெண்கள் மீது இருக்கும் வக்கிரமும் வன்மமும் வெளிப்பட்டிருக்கிறது. ஓர் அரசியல்வாதியாக அல்ல. அடிப்படையில் ஒரு மனிதராகவே இருப்பதற்குக் கூட தகுதியற்றவர் சி.வி.சண்முகம். ஜெயலலிதா இருக்கும் போது சி.வி.சண்முகம் இப்படிப் பேசியிருக்க முடியுமா? அவரை இருக்கும் இடம் தெரியாமல் அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தியிருப்பார் ஜெயலலிதா. ஆளுமை இல்லாத எடப்பாடி பழனிசாமி ஒரு கண்டிப்பைக்கூடச் செய்யவில்லை.
எடப்பாடி பழனிசாமி வீட்டிலும் பெண்கள் இருக்கத்தானே செய்வார்கள். அவர்களுக்கும் சேர்த்துத்தானே சேற்றை வாரி வீசியிருக்கிறார் சி.வி.சண்முகம். அந்த சொரணைகூட பழனிசாமிக்கு இருக்காதா? ஒருவர் அடிமையாய் மாறிவிட்டால், அவரிடம் ஆளுமையும் சூடு சொரணையும் எப்படி இருக்கும்? உங்கள் வீட்டுப் பெண்கள் எல்லாம் உங்களைப் பார்த்து என்ன நினைப்பார்கள்?. எடப்பாடி பழனிசாமியின் அடிவருடி சி.வி.சண்முகத்தின் நாக்கில் நாராசம்தானே வரும்.
மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் போன்ற பொருளாதாரத் தன்னிறைவு திட்டங்களால் பெண்கள் முன்னேறி வருகிறார்கள். அது அதிமுகவுக்குப் பிடிக்கவில்லை. அதனால்தான் பெண் இனத்தைக் குறிக்கும் வகையில் ‘பொண்டாட்டி இலவசம்’என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கெட்ட வார்த்தைகளில் திட்டுவதற்குக் கூட பெண் இனத்தைப் பயன்படுத்தும் கேடு கெட்டவர் சி.வி.சண்முகம்.
பெண்களை அவதூறாகப் பேசிய அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழந்த வரலாறு நிறைய உண்டு. பெண்களை இழிவுபடுத்தி வரும் அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் தக்கப் பதிலடிக் கொடுத்து பாடம் புகட்டுவார்கள்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.