
காப்பீட்டு நிறுவனங்களுக்கு பிரிமியம் தொகையை அதிகப்படுத்துவதற்குப் பதிலாக, அத்தொகையை சரியான வகையில் பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்த செலவு செய்ய வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ஜி. ஆர். இரவீந்திரநாத் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
“ பெரம்பூரில் உயர்சிறப்பு மருத்துவ சிகிச்சை மருத்துவமனை அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருப்பது வரவேற்பிற்குரியது. எனினும், உயர் சிறப்பு மருத்துவமனைகள் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்பட வேண்டும். சென்னையிலேயே பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைகளை அதிக அளவில் திறப்பது ஒட்டு மொத்த தமிழக மக்கள் நலனிற்கு உகந்ததல்ல.
தமிழ்நாட்டில் ஏழே முக்கால் கோடி மக்கள் வாழ்கின்றனர். சென்னை, அதனை ஒட்டிய பகுதிகளில் மட்டும் ஒரு கோடி பேர் வசிக்கின்றனர். மீதமுள்ள ஆறு கோடிக்கு மேலான மக்கள் தமிழ்நாடு முழுவதும் பரவி வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் மக்களின் மருத்துவ சேவைக்கு என சென்னையில், சென்னை மருத்துவக் கல்லூரி ஸ்டாண்ட்லி மருத்துவக் கல்லூரி கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி, ஓமந்தூரார் மருத்துவ கல்லூரி , இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி என ஐந்து அரசு மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன.
அரசு மகப்பேறு மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவமனை, மனநல மருத்துவமனை, கண் மருத்துவமனை, ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் காந்தி மருத்துவமனை உட்பட்ட பல பெரிய அரசு மருத்துவமனைகள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளோடு இணைந்து செயல்படுகின்றன.
செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி, திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி என இரண்டு அரசு மருத்துவக் கல்லூரிகள், காஞ்சிபுரம் புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை போன்றவை உள்ளன. இவை தவிர ஓமந்தூரார் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, கிண்டி பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையும் உள்ளன.
இந்நிலையில், பல்வேறு உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சைகளுக்காக மக்கள் தென் தமிழகம், மேற்கு தமிழகத்திலிருந்து தொலைவாகப் பயணம் செய்து சென்னையை நோக்கி வருகின்றனர். அவர்கள் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகின்றனர்.
உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை மருத்துவமனைகளை தமிழகம் எங்கும் பரவலாக அமைத்திட வேண்டும்.
அனைவருக்கும் அனைத்து விதமான சிகிச்சையும் எளிதாக, இலவசமாக வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைப்பதை உறுதி செய்திட வேண்டும். அந்த வகையில் திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, திருவாரூர் போன்ற மாவட்டங்களில் உயர் சிறப்பு மருத்துவ சிகிச்சை மருத்துவமனைகளை அமைப்பது மிகவும் அவசியமாகும். இது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும்.
மருத்துவக் காப்பீட்டு தொகையை ரூ 5 லட்சத்திலிருந்து ரூ 25 லட்சமாக உயர்த்தப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
பொது சுகாதாரத் துறையை வலுப்படுத்துவதிற்குப் பதில் , மருத்துவக் காப்பீட்டுத் தொகையை,அதற்கான பிரீமியத்தை தொடர்ந்து அதிகரிப்பது மக்கள் நலனுக்கு எதிரானதாகும்.
இது மருத்துவக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும், மூன்றாம் தரப்பு நிர்வாகத்தினருக்குமே அதிகப் பயன் அளிக்கும்.
மருத்துவக் காப்பீட்டை அடிப்படையாகக் கொண்ட மருத்துவத்துறையாக தமிழ்நாடு அரசின் மருத்துவத்துறை மாற்றப்படுவது ஏழை - எளிய ,மத்திய வர்க்க குடும்பங்களின் நலன்களுக்கு எதிரானதாகும்.” என்று டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் கூறியுள்ளார்.