(வலமிருந்து) செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்
(வலமிருந்து) செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

தோல்வி மோடிக்குதான்! – ப. சிதம்பரம் காட்டம்!

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்குத்தான் தோல்வி என முன்னாள் நிதி அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், “தமிழ்நாடு மக்கள் தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்திருக்கிறார்கள். இந்தியா கூட்டணிக்கு தமிழ்நாடுதான் நூற்றுக்கு நூறு கொடுத்திருக்கிறது.

மோடி, அமித் ஷாவின் பொய் பிரச்சாரம் அம்பலமாகி உள்ளது. 4ஆவது, 5ஆவது சுற்று வாக்குப்பதிவு நடக்கும்போதே 350, 400 தொகுதிகளில் வெற்றி என கிளப்பி விடப்பட்டது.

அகில இந்திய அளவில் 234 இடங்களை இந்தியா கூட்டணி பெற்றது சாதாரண வெற்றி அல்ல. 400 இடங்கள் இலக்கு வைத்திருந்த பா.ஜ.க. 240 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. பா.ஜ.க.வுக்கு மிகப் பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது.

வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு செயற்கையாக தயாரிக்கப்பட்டது. வாக்களித்தவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டதாக எந்த தகவலும் இல்லை. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்ட அனைவருமே 350 இடங்களில் பா.ஜ.க. கூட்டணி வெல்லும் என தெரிவித்தனர்.தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் மக்களை முட்டாளாக்கியுள்ளது. கருத்துக் கணிப்பு என்ற பெயரில் கருத்து திணிப்பு நடத்தப்பட்டு, மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டனர்.

பா.ஜ.க.வுக்கு நாட்டு மக்கள் அடக்கத்தை கற்றுத் தந்துள்ளனர். நேருவுடன் மோடி தன்னை ஒப்பிட்டுக் கொள்வதை காங்கிரஸ் கட்சியினரும், நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள். தேர்தல் முடிவுகள் அனைத்துக் கட்சியினருக்கும் படிப்பினைதான். சில மாநிலங்களில் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள தோல்வி எங்களுக்குப் படிப்பினையாக உள்ளது.

பங்குச்சந்தையின் வளர்ச்சி இந்தியப் பொருளாதார வளர்ச்சியைக் காட்டவில்லை. பங்குச்சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ளது வளர்ச்சி அல்ல; வீக்கம்.

நிஃப்டி 100 நிறுவனங்களின் பங்கு. அதன் விலையை அது குறிக்கிறது சென்செக்ஸ் 50 நிறுவங்களின் பங்கு. அதை வைத்தே இந்தியாவில் உள்ள மற்ற நிறுவங்களை மதிப்பிட முடியாது. இந்தியாவில் உள்ள 140 மக்களுக்கும் இதற்கும் தொடர்பே இல்லை. பங்குச்சந்தையில் யாரோ ஒருவருக்கு இழப்பு என்றால், யாரோ ஒருருவக்கு லாபம்.

இவிஎம் முறை வேண்டாம் என கூறவில்லை; நடைமுறையில் மாற்றம் வேண்டும் என்றே கூறுகிறோம்.

தேர்தல் முடிவால் மோடியும் பா.ஜ.க.வினரும் களையிழந்து, பொலிவிழந்து, உற்சாகம் இழந்துள்ளனர். தேர்தலில் மோடிக்கு தார்மீக தோல்வி கிடைத்துள்ளது. அரசியல் சாசனத்தை தேர்தல் முடிவுகள் மூலம் மக்களே காத்துள்ளனர். நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம், கொண்டாடுகிறோம். அதில் மோடிக்கு என்ன பிரச்னை? தேர்தலில் காங்கிரஸுக்கு தார்மீக வெற்றி கிடைத்துள்ளது. தோல்வி என்பது பிரதமர் மோடிக்குதான், பாஜக ஆட்சி நிலைக்குமா? என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.” இவ்வாறு ப. சிதம்பரம் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com