26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஒரு தேர்வு!
வீடு, மனை தொடர்பான பத்திரங்களை பதிவுத்துறை அலுவலகத்தில் பதியச் செல்லும்போது ஒவ்வொருவரும் கட்டாயம் சந்தித்தாக வேண்டிய நபர், பத்திர ஆவண எழுத்தர். நினைத்தவர்கள் எல்லாம் இந்த வேலையைச் செய்யலாமா என்றால், இல்லை; அதற்கென ஒரு தேர்வு இருக்கிறது என்கிறது அரசாங்கம்.
ஆனால், தமிழ்நாட்டில் 26 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆவண எழுத்தர் உரிமத் தேர்வை வயதுவரம்பு இல்லாமல் உடனடியாக அரசு நடத்த வேண்டும் எனக் கோரிக்கைகள் வலுத்துவருகின்றன.
தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் பதிவு செய்யப்படும் ஆவணங்களை தயாரித்து வழங்குவதற்கான ஆவண எழுத்தர் உரிமம் வழங்குவதற்கான தேர்வுகள் 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 26 ஆண்டுகளாக நடத்தப்படவில்லை எனக் கூறும் பா.ம.க. நிறுவனர் இராமதாசு,
”ஆவண எழுத்தர் உரிமம் பெறுவதற்கான தகுதியும், அனுபவமும் பெற்ற 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தேர்வுக்காக காத்திருக்கும் நிலையில், அதை நடத்த தமிழக அரசின் சார்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது கண்டிக்கத்தக்கது.” என கண்டனமும் தெரிவிக்கிறார்.
” தமிழ்நாட்டில் கடைசியாக ஆவண எழுத்தர் உரிமத் தேர்வு நடத்தப்பட்ட பிறகு நூற்றுக்கும் மேற்பட்ட புதிய சார்பதிவாளர் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன. அதன்பயனாக சார்பதிவாளர் அலுவலகங்களின் எண்ணிக்கை 589 ஆக உயர்ந்துள்ளது. ஆனால், உரிமம் பெற்ற ஆவண எழுத்தர்களில் எண்ணிக்கை 5141 ஆகவே உள்ளது. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வேறு பணி, வயது முதிர்வு, உயிரிழப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இப்போது பணி செய்யவில்லை. அதனால் ஒரு பதிவாளர் அலுவலக எல்லையில் சராசரியாக ஐந்துக்கும் குறைவாக ஆவண எழுத்தர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் பதிவு செய்யப்படும் சொத்து மற்றும் பிற ஆவணங்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. ஆனால், அவற்றை எழுதித் தரும் அளவுக்கு ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை உயரவில்லை. அதற்கு காரணம் குறிப்பிட்ட இடைவெளியில் ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகள் நடத்தப்படாதது தான். போதிய எண்ணிக்கையில் ஆவண எழுத்தர்கள் இல்லாததால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்படுவது மட்டுமின்றி, அரசுக்கு வரவேண்டிய வருவாயும் குறைகிறது. ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகளை நடத்தி உரிமம் வழங்குவதால் அரசுக்கு எந்த செலவும் ஏற்படாது. ஆனாலும், ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகளை நடத்த தமிழக அரசு தயங்குவதற்கான காரணம் தெரியவில்லை.
ஆவண எழுத்தர்களின் பற்றாக்குறையை உணர்ந்து கொண்ட தமிழக அரசு, அதற்கான தேர்வு விரைவில் நடத்தப்படும்; பத்திரப் பதிவுத்துறை தலைவர் அலுவலகம் மூலம் இந்தத் தேர்வு நடத்தப்படும் என்று கடந்த 2022-ஆம் ஆண்டில் அறிவித்தது. ஆனால், அதன்பின் இரு ஆண்டுகள் ஆகியும் அந்தத் தேர்வு நடத்தப்படவில்லை. அதை விட தமிழக அரசு செய்துள்ள இன்னொரு பெரிய அநீதி ஆவண எழுத்தர் தேர்வில் பங்கேற்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வயது வரம்பு தான். 26 ஆண்டுகளாக ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுகள் நடத்தப்படாத நிலையில், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது 35 ஆகவும், பிற வகுப்பினருக்கான வயதுவரம்பு 33 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருப்பவர்களின் குறைந்தபட்ச வயதே 40 ஆகும். அவர்களில் பலர் 55 வயதைக் கடந்து விட்டனர். இத்தகைய சூழலில் அதிகபட்சம் வயது 33 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டிருப்பதன் மூலம், ஆவண எழுத்தர் உரிமத்திற்காக காத்திருக்கும் எவருக்கும் பயன் கிடைக்காது. எனவே, அனைத்துத் தரப்பினரின் நன்மை கருதி தமிழ்நாட்டில் ஆவண எழுத்தர் உரிமத்திற்கான தேர்வை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும்; அதுமட்டுமின்றி, ஆவண எழுத்தர் உரிமத் தேர்வுக்கான வயது வரம்பை நீக்க வேண்டும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.