பண்டிகைக் காலத்தையொட்டி விலை உயர்வு- அரசு தலையிட வேண்டும்!

vegetables
காய்கறி, அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம்
Published on

பண்டிகைக் காலம், மழை வெள்ள சூழலைப் பயன்படுத்தி அத்தியாவசியப் பொருட்கள் கடுமையாக விலை ஏற்றியுள்ளனர் என்றும் மைய, மாநில அரசுகள் தலையிட்டு முறைப்படுத்த வேண்டும் என்று சி.பி.ஐ.(எம்) வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து சி.பி.ஐ.(எம்) மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பண்டிகைக் காலம், மழை வெள்ள சூழலைப் பயன்படுத்திக்கொண்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன; நல்லெண்ணெய், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விலை 4 நாள்கள் இடைவெளியில் ஒரு லிட்டர் ரூ.50வரை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. எனவே, இவ்விசயத்தில் உடனடியாக அரசு தலையீடு மேற்கொண்டு விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும்.” என்று கேட்டுக்கொண்டுள்ளார். 

”அண்மையில், வெளியான பணவீக்கத் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் சில்லறை பணவீக்கம் கடந்த 9 மாதங்களில் கடுமையான உயர்வைச் சந்தித்துள்ளது. இதில் காய்கறிகளின் விலை 36 சதவீதம் அதீத உயர்வைக் கண்டிருப்பதும், தானியங்கள், முட்டை, பருப்பு வகைகள், பழங்கள் என உணவுப்பொருட்களின் விலை சாதாரண மக்கள் வாங்க இயலாத அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது.

சென்னையில், இன்றைய நிலவரப்படி (15, அக்டோபர்) நல்லெண்ணெய் லிட்டர் ரூ.425, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் லிட்டர் ரூ.180, பூண்டு கிலோ ரூ.450 விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. அரிசி வகைகள் கிலோவுக்கு ரூ.10, பருப்பு வகைகள் கிலோ ரூ.20 வரை விலை உயர்த்தி விற்கப்பட்டன. காய்கறிச் சந்தையில் தக்காளி, வெங்காயம் விலை இரண்டு மடங்கு வரை உயர்ந்துள்ளது. பீன்ஸ் கிலோ ரூ.250, கேரட் ரூ.200, இஞ்சி ரூ.180 என விலை உயர்ந்துள்ளன. சில வியாபாரிகள், நெருக்கடியை வாய்ப்பாகப் பயன்படுத்தி இன்னும் விலையேற்றிக் கொள்ளையடிப்பதையும் பார்க்கிறோம்.” என்று அவர் தெரிவித்துள்ளார். 

”மொத்த விலைக் குறியீட்டின் அடிப்படையில் பணவீக்கம் கட்டுக்குள் இருப்பதாக சொன்னாலும், உணவுப்பொருட்கள், காய்கறிகள், அத்தியாவசியப் பொருட்களின் விலை தாறுமாறாக இருப்பதை அந்த விபரங்களும் காட்டுக்கின்றன. பண்டிகைக் காலத்தில் மக்கள் அதிகம் வாங்கும் உணவுப் பொருட்கள் மற்றும் உடைகள் விலையேற்றமடைந்துள்ளன. கணிணி உட்பட்ட மின் சாதனப் பொருட்களின் விலையிலும் உயர்வு உள்ளது.

எனவே, கிடுகிடுவென உயரும் விலைவாசியைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தலையிட வேண்டும். பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு உருளை விலைகளை குறைப்பதுடன், எண்ணெய், பருப்பு, காய்கறி போன்ற  அத்தியாவசிய உணவுப் பொருட்களை ரேசன் கடைகள் மூலம் அனைத்து மக்களுக்கும் நியாயமான விலையில் வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உடை, மின்சாதனப் பொருட்களின் விலையில் அசாதாரண உயர்வு ஏதுமில்லாமல் கட்டுப்படுத்த அரசின் தலையீடு அவசியம்.” என்றும் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணனின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com