ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட கடல் பகுதி அருகே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இப்போது நிலவிவருகிறது. இதன் காரணமாக தமிழகத்துக்கு மீண்டும் மழை கிடைக்க வாய்ப்புள்ளது.
இதுகுறித்து தனியார் ’ஈழத்தமிழ் வானிலை’ ஆர்வலர் விகேஎம் சசிக்குமார் வெளியிட்டுள்ள கணிப்பில், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தப் பகுதி நெல்லூருக்குக் கிழக்காக 324 கி.மீ. தொலைவில் நிலவுகிறது என்றும் இதன் காரணமாக காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் காற்று தென்கிழக்கிலிருந்து வீசவும் தென்னிலங்கையை மையமாகக்கொண்டு இன்றும் நாளையும் (20,21) மழையுடனான வானிலை நிலவலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள அம்பாறை மாவட்டத்தில் சில இடங்களில் கனமான மழை பதிவாக வாய்ப்பு உள்ளது என்றும்
மற்ற மாவட்டங்களில் இலேசான மழை பெய்யக்கூடும்; முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் இலேசான/மிதமான மழை கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் வானிலை ஆர்வலர் நா. செல்வகுமாரின் கணிப்பின்படி, வரும் 23ஆம் தேதி முதல் காவிரிப் படுகைப் பகுதிகள் உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு மீண்டும் நல்ல மழை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.