தலித் மக்கள் குறித்த இழிவு பேச்சு...கோவை சத்யன் மீது வன்கொடுமை வழக்கு பதிய ஆணையம் உத்தரவு!

கோவை சத்யன்
கோவை சத்யன்
Published on

தலித் மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக, அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை சத்யன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய, தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான விவாதத்தில் கலந்துகொண்ட அதிமுக செய்தி தொடர்பாளர் மற்றும் ஐ.டி.விங் பொறுப்பாளர் கோவை சத்யன், “பெயரை பார்த்தவுடன் இவர் ஒடுக்கப்பட்டவர்.. இவர் பிதுக்கப்பட்டவர்.. இவர் நசுக்கப்பட்டவர்.. என்று சொல்ல முடியுமா?" என்று பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையில் பேசினார்.

இவரது இந்த பேச்சுக்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் கோவை சத்யன் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிவிப்பு வருமாறு : “இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்வதற்கான முயற்சி எடுத்து வருகிறது. தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை குறித்து மாலை முரசு தொலைக்காட்சியில் 29.10.2025 அன்று இரவு 8.00 மணிக்கு நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற கோவை சத்யன், அ.இ.அ.தி.மு.க செய்தி தொடர்பாளர் மற்றும் ஐ.டி.விங் பொறுப்பாளர் “வாக்காளர் தீவிர திருத்த நடவடிக்கை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை மட்டுமே பாதிக்கிறது என்று சொல்வது உண்மையல்ல. அரசு எப்போதெல்லாம் சட்டத்தை கொண்டு வருகிறதோ அப்போதெல்லாம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்கள் நாங்கள் ஒதுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம், நசுக்கப்பட்டோம் என்று கூச்சலிடுகிறார்கள்” என்று பேசினார். கோவை சத்யன் அவர்கள் மேற்படி தொலைக்காட்சி பொதுவழி விவாதத்தின்போது பேசியது நம் நாட்டில் வாழும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களை இழிவுப்படுத்தும் வகையில் இருக்கிறது.

அவரது பேச்சு வன்கொடுமை தடுப்புச் சட்டம் 1989ன் கீழ் தண்டிக்கத்தக்க குற்றாகும். அதனால் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் தலைவர், முனைவர் நீதியரசர் ச.தமிழ்வாணன், துணைத் தலைவர், எழுத்தாளர் இமையம் (வெ.அண்ணாமலை), உறுப்பினர் மு.பொன்தோஸ் ஆகியோரை கொண்ட இவ்வாணையத்தின் சிறப்பு அமர்வு தாமாக முன்வந்து கோவை சத்யன் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்கிறது.

அதன்படி, மாலை முரசு தொலைக்காட்சி அமைந்துள்ள சரகத்தின் காவல் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் சம்பந்தப்பட்ட கோவை சத்யன் மீது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுத்து, அதன் விபரத்தினை அறிக்கையாக இவ்வாணையத்திற்கு 10.11.2025-க்குள் சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்படுகிறது." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com