“நிதி ஒதுக்கியும் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை”

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்
Published on

மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது என நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் விமர்ச்சித்துள்ளார்.

டித்வா புயலின் தாக்கத்தால் தலைநகர் சென்னை உள்ளிட்ட பல்வவேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கொட்டித் தீர்த்துள்ளது. இதனால் நகரின் பல்வேறு பகுதியில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் பதிவில், “சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வடிகால் வசதிகள் முறையாகவும் முழுமையாகவும் செய்து முடிக்கப்படாததே மக்களின் இந்தத் துயரத்திற்குக் காரணம். பொதுமக்கள் தங்கள் பாதுகாப்பைக் கவனத்தில் கொண்டு எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

மழையால் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பாதுகாப்போடு செய்திட வேண்டும் என்று கழகத் தோழர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

மழைநீர் வடிகால் வசதியை ஏற்படுத்துவதற்காக நிதி ஒதுக்கீடு செய்தும், நான்கரை ஆண்டுக்கால ஆட்சியில் பணிகள் முடிக்கப்படவில்லை. மக்கள் மீது சிறிதேனும் அக்கறையிருந்திருந்தால் கொஞ்சமாகப் பெய்த மழைக்கே இவ்வளவு தண்ணீர் தேங்கியிருக்காது. மீதமுள்ள பருவமழைக் காலத்திலாவது மக்கள் சிரமத்திற்கு உள்ளாகாத வகையிலும், அவர்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலும் மழைநீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com