நிவாரண பொருட்கள் வழங்கும் அண்ணாமலை
நிவாரண பொருட்கள் வழங்கும் அண்ணாமலை

இயல்பு வாழ்க்கை முடங்கினால் வளர்ச்சி பாதிக்கும்! - அண்ணாமலை

”ஐந்து நாள்கள் இயல்பு வாழ்க்கை முடங்கினால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்படையும்” என்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மிக்ஜம் புயலால் ஏற்பட்ட கனமழையில் வேளச்சேரி கல்கி நகர், ஏ.ஜி.எஸ். காலனி, நேதாஜி காலனி, புவனேஸ்வர் நகர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சுற்றி கழுத்து அளவு தண்ணீர் தேங்கி உள்ளது.

தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஏ.ஜி.எஸ். காலனி மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது, மக்களிடம் குறைகளைக் கேட்டு அறிந்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

“சென்னை மக்கள் மிக்ஜம் புயலுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டு இருக்கின்றனர். குடிநீர் பிரச்சனை உள்ளது. சென்னையில், 70 சதவீத பகுதிகளில் மழைநீர் வடிய ஆரம்பித்து உள்ளது.

மீதமுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது. மழை நீர் எங்கு தேங்கி உள்ளதோ அங்கு மின் வினியோகம் நிறுத்தி வைத்து உள்ளனர். மக்கள் போராடி வெளியேவர ஆரம்பித்து உள்ளனர்.

பா.ஜ.க.வினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். கடலூரில் இருந்து படகுகளை கொண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு வருகின்றோம். நாளைக்குள் (இன்று), 10 சதவீதம் தவிர மற்ற பகுதிகள் இயல்பு நிலைக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த நேரத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. சென்னை ஒவ்வொரு வருடமும் இதே நிலையில் இருக்க முடியாது. உலகத்தில் உள்ள நிறுவனங்கள் சென்னையை நோக்கி வர வேண்டும் என நினைக்கும் போது, ஐந்து நாள்கள் இயல்பு வாழ்க்கையை முடங்கினால் தமிழகத்தின் வளர்ச்சி பாதிப்படையும்.

சென்னை மாநகராட்சி அரசு அதிகாரிகள் கடுமையாக உழைத்து வருகிறார்கள். எந்த ஒரு குற்றமும் குறையும் சொல்ல முடியாது. நிர்வாகத் திறமை தோல்வி. முன் களப்பணியாளர்கள் கடுமையாக உழைக்கின்றனர். அவர்களுடன் பா.ஜ.க.வினரும் இருப்பார்கள்.

மழைநீர் செல்ல வடிகால் வாய்கள் அமைக்க சென்னைக்கு மட்டும், 4,397 கோடி ரூபாய் தரப்பட்டது. ஏழு ஆண்டுகளில் மாநில அரசும் ஒதுக்கிய தொகைகள் என்ன ஆனது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தண்ணீர் குறைந்து இருந்தால் ஏற்கலாம்.

ஆனால் தண்ணீரே வராத பகுதிகளுக்கு தண்ணீர் வருகிறது. தண்ணீர் அகற்றிய பின் தான் மின்சாரம் வழங்க முடியும். அரசு அதிகாரிகள் வேகமாக செய்து வருகிறார்கள். சென்னையில் மக்கள் அரசியல்வாதிகளை நம்ப மறுக்கின்றனர்.

அதிகாரிகளை நம்புகின்றனர். அரசியல்வாதிகள் தங்களை ஏமாற்றி விட்டதாக நினைக்கின்றனர். 40 ஆண்டுகளாக அரசியல்வாதிகளின் பதில்களை ஏற்று வந்தோம். இதனால் நாங்கள் பாதிக்கப்படுகிறோம் என மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இதற்கு அரசியல்வாதிகள் மாற்றி கொண்டு திட்டங்களைக் கொண்டு வர வேண்டும்.” இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com