'டெக்சாமெதாசோன்' மருந்தால் செவிலியர் மாணவி உயிரிழப்பா?

trichy govt hospital
திருச்சி அரசு பொது மருத்துவமனை
Published on

திருச்சி மகாத்மா காந்தி அரசு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட செவிலியர் மாணவி உயிரிழந்ததற்கு 'டெக்சாமெதாசோன்' என்ற மருந்து காரணமாக இருக்கலாம் என்று நிபுணர் குழு ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

கடந்த மே 22-ஆம் தேதி மூக்கு சதை சீரமைப்பு அறுவை சிகிச்சைக்காக 20 வயதான மூன்றாம் ஆண்டு செவிலியர் மாணவி திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு ஒவ்வாமை, அழற்சி போன்ற பாதிப்புகளுக்கு அறுவை சிகிச்சையின்போதும், அதற்கு பின்னரும் வழங்கப்படும் 'டெக்சாமெதாசோன்' என்ற மருந்து அவருக்கு செலுத்தப்பட்டது.

அதன்பிறகு இதய பாதிப்பு, கடுமையான பக்கவிளைவுகள் ஏற்பட்டு மாணவி உயிரிழந்ததாக புகார் எழுந்ததையடுத்து, அந்த மருந்து தொடர்பான ஆய்வை மேற்கொள்ள நிபுணர் குழுவை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைத்தது. அதில் இந்த மருந்து மாணவியின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கலாம் என்றும் அந்த மருந்தின் தரத்தை ஆய்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை வழங்கப்பட்டது.

இதனால், குறிப்பிட்ட உற்பத்தி தொகுப்பைச் சேர்ந்த (சிஹெச்ஐ - 60004) 'டெக்சாமெதாசோன் 8 எம்.ஜி.' மருந்துகளைப் பயன்படுத்தக்கூடாது என சுகாதாரத் துறையினர் உத்தரவிட்டு, அந்த மருந்துகளை சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும் ஆராய்ச்சி நிலையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த மே 29-ஆம் தேதி திருச்சி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் எஸ். குமரவேல், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகத்துக்கு 'டெக்சாமெதாசோன்' மருந்தின் பக்கவிளைவுகளை குறிப்பிட்டு உடனடியாக பகுப்பாய்வு செய்து உரிய தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் (டிஎன்எம்எஸ்சி) உயர் அதிகாரி ஒருவர் கூறுயதாவது:

"மாநிலத்தில் உள்ள வேறு எந்த மருத்துவமனையிலிருந்தும், இது போன்ற பக்கவிளைவு புகார்கள் வரவில்லை. எனினும், திருச்சியில் புகார் எழுந்தவுடன் உரிய நடைமுறைகளை பின்பற்றி, அந்த குறிப்பிட்ட தொகுதி மருந்துகளை பயன்படுத்த தடை விதித்துள்ளோம்.அதன் மாதிரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அந்த அறிக்கை வந்த பிறகே இந்தச் சந்தேகங்கள் உண்மையா என்பது தெரியவரும்." என்று மருத்துவப் பணிகள் கழகத்தின் உயர் அதிகாரி கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com