தற்செயலாக முகத்தை துடைத்ததை தவறாக சித்தரித்துவிட்டார்கள் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்த பின் எழுந்த விமர்சனங்கள் தொடர்பாக சேலம் மாவட்டம் ஓமலூரில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
“நான் டெல்லி சென்றது தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி என்னைப் பற்றி விமர்சனம் செய்து வருகிறார். திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது எப்படியெல்லாம் நடந்து கொண்டது என்பது எல்லோருக்கும் தெரியும்.
திமுக ஆட்சிக்கு வந்த போது யாரை விமர்சனம் செய்தார்களோ அவர்களுக்கு ரத்தின கம்பளம் விரித்து வரவேற்ற காட்சியை ஊடகம், பத்திரிக்கை மக்கள் இடத்திலே காண்பித்து விட்டனர்.
கேலோ, செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல நிகழ்வுகளுக்கு பிரதமர் மோடியை அழைத்து நிகழ்வை நடத்தினார்கள்.
எதிர்க்கட்சியாக இருந்தபோது கருப்பு பலூன் பறக்கவிட்டவர், ஆளுங்கட்சியாக இருக்கும்போது வெள்ளை குடை கொடுத்தார்.
செப்டம்பர் 16ஆம் தேதி இரவு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நான் சந்திக்கப்போகிறேன் என்பது ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தேன். அதன்படி, அவரை கட்சியின் மாநில உறுப்பினர்களுடன் சேர்ந்து சந்தித்தேன். நேரம் அதிகமாகிவிட்டதால் 10 மணிக்கு அவர்களை அனுப்பிவிட்டு, பத்து நிமிடம் அவரிடம் பேசிவிட்டு வந்தேன்.
காரில் ஏறுவதற்கு முன் முகத்தைத் துடைத்தேன். அதை வைத்து அரசியல் செய்வது வேதனையாகவும் உள்ளது.
துணை குடியரசுத் தலைவரை நேரடியாக அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்தேன். அவருக்கு வாழ்த்துக் கூறினோம். அப்போதும் நான் அரசாங்க காரில் தான் சென்றேன். இதை எல்லாம் திட்டமிட்டு பத்திரிக்கைகளில் செய்தி வெளியிடுவார்கள் என்று தெரிந்து தான் தமிழ்நாடு இல்லத்திலிருந்து அரசாங்கத்திற்கு சொந்தமான காரில் தான் நான் அவரை சந்திக்க சென்றேன்.
ஒருசில ஊடகங்கள் இதை திட்டமிட்டு செய்தியாக்கின. வருத்தமாக உள்ளது. இனிமேல் ரெஸ்ட் ரூம் போனால் கூட ஊடகங்களிடம் சொல்லிவிட்டுத்தான் போக வேண்டும் போல.
கரூர் கூட்டத்திலும் முதல்வர் இதை பேசுகிறார். எதை பேச வேண்டும் என தெரியாமல் பேசுகிறார். எங்கள் மீது குற்றச்சாட்டு வைக்க காரணம் இல்லாத காரணத்தால் சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டை வைக்கிறார்.
தேசத்திற்காக பாடுபட்ட முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தோம்.
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தலையிடமாட்டேன் என ஏற்கெனவே அமித் ஷா தெளிவுபடுத்திவிட்டார். அவர் யாருடனும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.” என்றார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர் ஒருவர், நீங்கள் அமித் ஷாவை சந்தித்துவிட்டு வந்தபோது தொழிலதிபர் ஒருவரின் காரில் வந்ததாக சொல்கிறார்களே என கேள்வி எழுப்பினார்.
அதற்கு எடப்பாடி பழனிசாமி, ”நீங்களே யூகிக்கக் கூடாது. ஒருவர் வருவது போவது பற்றி கேட்கக் கூடாது. கார் இல்லாததால் கிடைத்த காரில் சென்றேன்.” என மழுப்பலாக பதில் கூறினார்.