
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தவெக – காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக ராகுல் காந்தியிடம் விஜய் பேசினார் என்பது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
எஸ்.ஐ.ஆர்.-ஐ எதிர்த்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று தமிழ்நாடு முழுக்க மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி மதுரையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பங்கேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி.ஆர். நிர்மல் குமார், பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
த.வெ.க.வை காப்பாற்ற அதிமுகவால் மட்டும்தான் முடியும் என்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், “அவர்களுடைய நோக்கத்தை மறந்துவிட்டு பேசுகிறார்கள். பிரதான எதிரி திமுகவை பற்றி பேசுவதை விட்டுவிட்டு எங்களைப் பற்றி பேசுகிறார்கள். அப்படி பேசுபவர்கள் மறைமுகமாக திமுகவுக்கு உதவி செய்கிறார்கள்.
யார் வேண்டுமானாலும் கூட்டணிக்கு அழைக்கலாம் ஆனால் தவறான வார்த்தைகளை பயன்படுத்தக்கூடாது. அதிமுக என்ற ஆட்சியில் இல்லாத கட்சியை பற்றி பேச வேண்டிய அவசியமில்லை.
எங்கள் கொள்கை எதிரி பாஜக என ஏற்கனவே சொல்லிவிட்டோம். எனவே பாஜகவோடு இருக்கும் எந்தக் கட்சியோடும் கூட்டணி அமைக்க 1 சதவிகிதம்கூட வாய்ப்பு இல்லை. எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எங்கள் முதல்வர் வேட்பாளர் விஜய் தான்.
கூட்டணி குறித்து ராகுல் காந்தி விஜய்யிடம் பேசினார் என்பது புரளியே. அப்படி பேசினால் நாங்கள் அதை பொதுவெளியில் தெரிவிப்போம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.