விஜய்க்கு அதிக கூட்டம் வருமென்று தெரியாதா...? - நீதிபதி சரமாரி கேள்வி!

விஜய்க்கு அதிக கூட்டம் வருமென்று தெரியாதா...? - நீதிபதி சரமாரி கேள்வி!
Published on

விஜய்யின் பிரசாரக் கூட்டம் நடத்துவதற்கு திடல் போன்ற பகுதியை தமிழக வெற்றிக் கழகத்தினர் கேட்காதது ஏன்? என்று கரூர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

கரூரில் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு இதுவரை 41 பேர் பலியாகினர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதல்கட்டமாக தவெக மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் மாநகர நிர்வாகி மாசி பொன்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி பரத் குமார் அமர்வில் இன்று காலை விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அரசுத் தரப்பில், “தவெகவினர் அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை. தவெக பொதுச் செயலாளர் ஆனந்தின் ஒப்புதலுடன், தவெக நிர்வாகிகளை அழைத்துச் சென்று இடத்தை காட்டிய பிறகே அனுமதி அளிக்கப்பட்டது. வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்யும்போதே ஆனந்த் திருப்தி தெரிவித்தார். அப்போது வேலுச்சாமிபுரத்தை ஏற்பதற்கு ஆனந்த் மறுப்பு தெரிவிக்கவில்லை. நேர அட்டவணையை விஜய் கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். வேகமாக வரச் சொல்லி காவல்துறையினர் அறிவுறுத்தியதை மீறி, மாற்று வழியில் வந்தனர்.” என்று வாதிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிபதி பரத் குமார், “மூன்று இடமும் போதுமானது கிடையாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் குறைவாக வருவார்கள் என்று எப்படி மதிப்பிட்டீர்கள்?, 10,000 பேர் தான் வருவார்கள் என்று எதனை வைத்து கூறினீர்கள்?, திடல் போன்ற இடத்தை கேட்காதது ஏன்?, அதிக கூட்டம் வருமென்று விஜய்க்கு தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா?, கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்?” என அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டது.

தவெக தரப்பில் அளித்த பதிலில், “காவல்துறையினர் ஒவ்வொரு மனுவாக நிராகரித்தனர். சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் யாரும் கூட்டத்துக்கு வரமாட்டார்கள் என நினைத்தோம். இவ்வளவு கூட்டம் வருமென நாங்கள் நினைக்கவில்லை. காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. காவல்துறையின் 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம். அரசியல் காரணங்களுக்காக எங்களுக்கு எதிராக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் சட்டவிரோதிகள் நுழைந்துவிட்டனர். ஆம்புலன்ஸ் வர வேண்டிய அவசியம் இல்லை.கட்சிக்காரர்களை நாங்கள் தடுக்கலாம்; மக்களை தடுக்க வேண்டியது போலீஸ்தான்.”எனத் தெரிவிக்கப்பட்டது.

மேலும், காவல்துறை தரப்பில், “கூட்டம் அளவுகடந்து சென்ற போது பேருந்தை முன்னதாகவே நிறுத்தி பேசச் சொல்லி நாங்கள் அறிவுறுத்தினோம், ஆனால், ஆதவ் அர்ஜுனா கேட்க மறுத்துவிட்டார்.” எனத் தெரிவிக்கப்பட்டது.

"எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்து விட்டார்கள் என்று எங்களுக்குத்தான் அதிக வருத்தம். இதனால்தான் தவெக தலைவர் விஜய் வெளியே வரவில்லை.” என தவெக தரப்பினர் வாதம் வைத்துள்ளனர்.

“எடப்பாடி பழனிசாமிக்கு வருவது கட்சிக் கூட்டம். விஜய்யை பார்க்க அனைத்து தரப்பினரும் வருவார்கள். குழந்தைகள் கண்டிப்பாக வருவார்கள். அதற்குத் தகுந்த இடத்தை நீங்கள் கேட்டிருக்க வேண்டும். கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரசாரத்தை நிறுத்தவில்லை.” என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். மனசாட்சிப்படி தான் உத்தரவு பிறப்பிப்பேன் எனக் கூறி விசாரணையை ஒத்தி வைத்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com