
தமிழ்சினிமாவின் மாபெரும் இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா, சென்னையில் உள்ள தன் வீட்டில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 84. இயக்குநர் இமயம் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அவர் சில காலமாகவே வயோதிகத்தால் உடல் நலம் குன்றியிருந்தார்.
தமிழ் சினிமாவின் பாதையை மாற்றிய ஒரு சிலரில் பாரதிராஜா முன்னணி வகிக்கிறார். ஸ்டூடியோக்களில் முடங்கியிருந்த திரையுலகை தன் முதல் படமான 16 வயதிலே மூலம் கிராமங்களுக்குக் கொண்டு சென்றவர். அச்சு அசலான கிராமத்து தமிழ் வாழ்வியலை தன் படங்களின் மூலம் படம் பிடித்தவர். தன் தனித்துவமான திரைமொழிக்காக இன்றும் பாராட்டப்படுகிறவர். பாரதிராஜாவுக்கென்று ஒரு மிகப்பெரிய சீடர் பரம்பரை இயக்குநர்கள், அவர் உருவாக்கிய ஆர் வரிசை நாயகிகள் இருக்கிறார்கள்.
பாரதிராஜாவின் மறைவு தமிழ் சினிமாவில் உருவாக்கி இருக்கும் மாபெரும் வெற்றிடம் இட்டு நிரப்பவே இயலாத ஒன்று.
தன்னுடைய மகன் மனோஜ் உயிரிழப்பை அடுத்து தன் சினிமா தொடர்பான ஈடுபாட்டில் இருந்து விலகி இருந்த பாரதிராஜா, சென்னை நீலாங்கரையில் உள்ள தன் வீட்டில் காலமானார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், அலைகள் ஓய்வதில்லை, டிக்டிக்டிக், காதல் ஓவியம், வாலிபமே வாவா, மண்வாசனை, புதுமைப்பெண், ஒரு கைதியின் டைரி, முதல் மரியாதை, கடலோர கவிதைகள், வேதம் புதிது, கொடி பறக்குது, என்னுயிர் தோழன், புது நெல்லு புது நாத்து, நாடோடி தென்றல், கேப்டன் மகள், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா, பசும்பொன், தமிழ்செல்வன், அந்தி மந்தாரை, தாஜ்மகால், கடல் பூக்கள், ஈரநிலம், கண்களால் கைது செய், பொம்மலாட்டம், அன்னக்கொடி, மீண்டும் ஒரு மரியாதை ஆகிய தமிழ் படங்களையும், சீதாகொகா சிலுகா, யுவதாரம் புலிச்சின்டி, ஈதரம் இல்லலு, ஜமடகனி, ஆராதனா ஆகிய தெலுங்கு படங்களையும், சொல்வ சவான், லவவர்ஸ், சாவேரே வலி காடி ஆகிய இந்திப் படங்கள் என சுமார் 44 படங்களை இயக்கியுள்ளார்.
கிராமத்தில் இருந்து நகருக்குப் புறப்பட்டு வந்து தான் விரும்பிய துறையில் வெற்றிக்கொடி நாட்டமுடியும் என நிரூபித்து பல இளைஞர்களுக்கு ஊக்கத்தை விதைத்தவர்.