ஆம்ஸ்ட்ராங் வழக்கு… விசாரணை வளையத்தில் பிரபல இயக்குநரின் மனைவி!
‘கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக’ ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒவ்வொரு நாளும் ஒரு கதை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் 5ஆம் தேதி கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலையில் தொடர்புடையவர்களைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு சுரேஷின் தம்பியான பொன்னை பாலு, மலர்கொடி, அஞ்சலை, ஹரிதரன், அதிமுக, திமுக, பாஜக, த.மா.கா, காங்கிரஸ் உட்பட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகளுக்கும் இந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
ரவுடிகள், அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 6 பேர் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் தேடப்படும் முக்கிய குற்றவாளியான ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன். வழக்கறிஞரான இவர், தன் நண்பர் சிவாவுடன் மதுரைக்குச் சென்று, அங்கிருந்து விமானத்தில் டெல்லிக்குச் சென்று, பின்னர் தாய்லாந்துக்கு தப்பிச் சென்றிருக்கிறார் என்று கூறப்படுகிறது.
கிருஷ்ணன் இங்கிருந்து தப்பிச் செல்வதற்கு முன்னர் யார்யாருடன் எல்லாம் செல்போனில் பேசினார் என்ற தகவலை காவல்துறை திரட்டியது . இதில் இயக்குநர் நெல்சனின் மனைவியும் வழக்கறிஞருமான மோனிஷாவும் பேசியிருப்பது தெரியவந்தது. இவர், கிருஷ்ணாவுக்கு ஏதேனும் உதவி செய்திருப்பாரா என்ற கோணத்தில் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கிருஷ்ணாவும் – மோனிஷாவும் பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள் என்பதும், வழக்கு ஒன்றிற்காகவே அவர் கிருஷ்ணாவிடம் பேசியிருக்கிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் கிருஷ்ணா உட்பட தன் நண்பர்களுடன் இருக்கும் புகைப்படத்தையும் மோனிஷா காவல்துறைக்கு கொடுத்துள்ளார்.
மோனிஷாவைத் தொடர்ந்து நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயம் தமிழ்த் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சங்கிலித் தொடராகச் சொல்லும் இந்த வழக்கு இன்னும் என்னென்ன பரபரப்புகளைக் கொண்டுவரப்போகிறதோ?