4,619 பேருக்கு உண்ணிக் காய்ச்சல்- அமைச்சர் அருண்ராஜ் தகவல்!

Scrub typhus
உண்ணிக் காய்ச்சல்
Published on

தமிழகத்தில் தற்போதுவரை 17,000 பேர் டெங்கு காய்ச்சலாலும், 4,619 பேர் உண்ணி காய்ச்சலாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.

மனிதர்களின் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்ற கிருமிகளுள் ஒன்று 'ஒரியன்சியா சுசுகமுசி' என்ற பாக்டீரியா ஆகும். இதுதான் உண்ணிக்காய்ச்சல் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

'டிரோம்பிகுலிட் மைட்' என்ற மிகச்சிறிய பூச்சியின் லார்வா, கண்ணுக்குத் தெரியாத உண்ணிகளின் லார்வாக்கள் 'ஒரியன்சியா சுசுகமுசி' பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு இருந்தால், மனிதனைக் கடிக்கும்போது அதன் பாக்டீரியா மனித உடலுக்குள் புகுந்துவிடும்.

புல், புதர், இலைக்குப்பை ஆகிய இடங்களில் வாழும் இந்த லார்வா உண்ணிகள், மனிதர்கள் அந்தப் பாதையை கடக்கும்போது, அவர்களின் தோலில் ஒட்டிக்கொள்ளும். இதன்மூலம் மனிதர்களின் உடலுக்குள், இந்த கிருமிகள் நுழைகின்றன. மனித உடலுக்குள் நுழைந்த 1 முதல் 2 வாரங்களுக்குள் காய்ச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படும்.

உண்ணி லார்வாக்கள் மனித உடலில் கடிப்பதை உணரமுடியாது. மேலும், இந்த உண்ணிக் காய்ச்சல் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவாது.

இந்த உண்ணிகள் கடித்த இடத்தில், சிறிய சிவப்புப் புள்ளி, கருப்பு நிறப் புண், அரிப்பு, சிறிய வீக்கம் ஆகியவை ஏற்படலாம்.

திடீர் காய்ச்சல், கடுமையான தலைவலி, உடல்வலி, சோர்வு ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனையை அணுக வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

சிகிச்சை எடுத்துக்கொள்ள தாமதித்தால், சிலருக்கு நுரையீரல், மூளை, சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com