பாஜகவுடன் அதிருப்தி... கூட்டணியிலிருந்து வெளியேறுகிறாரா சரத்குமார்?

நடிகர் சரத்குமார்
நடிகர் சரத்குமார்
Published on

பாஜகவில் எனக்கு ஏன் பதவி தரவில்லை என ஆதரவாளர்கள் கேட்கின்றனர். எனக்கும் அந்த ஆதங்கம் உள்ளது என சரத்குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியைப் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்த நடிகர் சரத்குமார், தற்போது கட்சித் தலைமை மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். சென்னையில் இன்று (மார்ச் 22) தனது ஆதரவாளர்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

பாஜகவில் இணைந்தபோது சரத்குமார் மற்றும் அவரது கட்சி நிர்வாகிகளுக்கு முக்கியப் பொறுப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. இது குறித்துப் பேசிய சரத்குமார், “கட்சியில் இணைந்து சிறப்பாகப் பணியாற்றி வருகிறோம். ஆனால், தலைவராகிய எனக்கே இதுவரை எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை. தேர்தல் களம் நெருங்கும் வேளையில், எந்தப் பொறுப்பும் இன்றி எப்படிச் செயல்பட முடியும் என நிர்வாகிகள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்,” என்றார்.

கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் சரத்குமாரிடம் அதிரடியான கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். “பாஜகவில் உரிய அங்கீகாரம் கிடைக்காத பட்சத்தில், ஏன் மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியையே தொடங்கக் கூடாது?” என அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். தொண்டர்களின் இந்த எண்ண ஓட்டத்தைத் தான் உள்வாங்கிக் கொண்டதாகச் சரத்குமார் தெரிவித்தார்.

தனது அரசியல் பயணத்தைச் சுட்டிக்காட்டிய சரத்குமார், “1996ஆம் ஆண்டு முதலே தமிழக அரசியல் மாற்றங்களில் முக்கியப் பங்காற்றியவன் நான். திருச்சி பொதுக்கூட்ட மேடையில் எனது படம் கூட இடம்பெறாதது குறித்துத் தொண்டர்கள் வருத்தப்படுகிறார்கள். இது வேதனை அல்ல, எனது ஆதங்கம். இது தொடர்பாகத் தமிழக பாஜக தலைவருக்கும், தேசியத் தலைமைக்கும் நாளை அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுத உள்ளேன். ஒரு பொறுப்பு இருந்தால் மட்டுமே என்னால் முழுமையாகச் செயல்பட முடியும் என்பது ஆதரவாளர்கள் மற்றும் எனது எண்ணம் என்பதை அதில் வெளிப்படுத்த உள்ளேன்,” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com