
அண்ணா அறிவாலயத்தில் திமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோருக்கான விருப்பமனு விநியோகம் இன்று (பிப். 20) தொடங்கி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த சில வாரங்களில் 2026ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று (பிப்ரவரி 20) முதல் தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட விருப்பமனுக்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
திமுக விருப்பமனுக்கள் இன்று முதல் வழங்கப்படுகின்றன. அவற்றை பூர்த்தி செய்து வரும் மார்ச் 2ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விருப்பமனு பெறுவதற்கான கட்டணமாக பொது தொகுதிக்கு ரூ.25,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் தனித்தொகுதிகளுக்கு ரூ.10,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திமுகவினர் விண்ணப்பித்த தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டால், அவர்களது விண்ணப்பக் கட்டணம் திருப்பி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பப் படிவத்தை ரூ.1,000 செலுத்தி சென்னையில் உள்ள தலைமை கழகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை
திமுக மாவட்ட செயலாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் இன்று (பிப்ரவரி 20) நடைபெறுகிறது. முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டம் மாலை 6.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் நடைபெறும் என திமுக தெரிவித்துள்ளது. இந்த கூட்டத்தில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்னும் தலைப்பில் வீடு வீடாக மேற்கொள்ளும் பரப்புரைக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.