ஒரே குரலில் திமுக - அதிமுக... பணியுமா மத்திய அரசு?
தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடும் காட்டும் மத்திய அரசைக் கண்டித்து திமுக மாவட்டச் செயலாளர் கூட்டத்திலும் அதிமுக செயற்குழு குழுக் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன.
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் முக்கியமாக மூன்றாவது தீர்மானம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்த தீர்மானத்தில்:
“மாநில உரிமைக்கான குரலைத் தொடர்ந்து முழங்கிடும் திமுக தலைவரும் முதலமைச்சருமான முக ஸ்டாலினின் வழிகாட்டுதலில், கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையிலும் மாநிலங்களவையிலும் ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டு வருகின்ற நிலையிலும், தமிழ்நாட்டுக்கு என்று எந்தச் சிறப்பு திட்டத்தையும் வழங்காமல், முறையான நிதி ஒதுக்கீடு செய்யாமல், இரயில்வே துறையின் திட்டங்களில்கூட பாராமுகமாக நடந்துக் கொள்வதையும் பாரபட்சம் காட்டுவதையும் வழக்கமாக வைத்து, தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு இந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.” என்று கூறப்பட்டுள்ளது.
அதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் மொத்தம் ஒன்பது தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில் முக்கியமான சில தீர்மானங்கள்…
· நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்காத திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
· மக்கள் நலன் கருதி மின்கட்டணுயர்வை ரத்து செய்திடவும்; மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்திடவும் திமுக அரசை வலியுறுத்தல்!
· மீனவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத விடியா திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடும் கண்டனம்!
· மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும்; போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம்!
கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் உட்பட பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டவில்லை. இந்த நிலையில், மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து இருகட்சிகளும் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.