
தமிழ்நாட்டுக்குத் திட்டங்களும் இல்லை; அடுப்பு எரிக்க கேஸ் சிலிண்டரும் இல்லை; தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் பா.ஜ.க. கூட்டணி அரசையும் அதன் அடிமைக் கூட்டணியையும் கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஒன்றிய, நகர, பகுதி, பேரூர்களில் வரும் 15.03.2026 ஞாயிற்றுக் கிழமை - காலை 10.30 மணிக்கு தி.மு.க. கூட்டணி கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,
”ஒன்றிய பாஜக அரசின் தவறான வெளியுறவுக் கொள்கையினாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவும் இன்று நாடு முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டருக்கும் – வணிக ரீதியிலான கேஸ் சிலிண்டருக்கும் தட்டுபாடு ஏற்பட்டு மக்கள் அவதியுற்று வருகின்றனர். உணவகங்கள், வணிக நிறுவனங்கள் சரிவர இயங்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. சிறு-குறு தொழில்கள் உள்ள அதிக தொழில்வளமிக்க தமிழ்நாடு இந்த கடுமையான பாதிப்பை சந்திக்கும் என்பதால் ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து நிலைமையை சரிசெய்ய வேண்டும் என மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இந்திய பிரதமர் மோடி அவர்களுக்கு கடிதம் வாயிலாக வலியுறுத்தி இருந்தார். ஆனால் தற்போது வரை மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கி நிலைமையை சீராக்க முறையான நடவடிக்கை எடுக்கவில்லை ஒன்றிய NDA அரசு. நாடாளுமன்றத்தில் இதைப்பற்றி பேசவே பிரதமர் மறுத்து வருவது கண்டத்திற்குரியது.
அதோடு தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி , நூறு நாள் வேலைத் திட்ட நிதி, குடிநீர் இணைப்பு நிதி என எந்த நிதியையும் ஒதுக்காமல் நிறுத்தி வைத்திருப்பது. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம், ஒசூர் விமான நிலையம் என எந்தவொரு வளர்ச்சித் திட்டத்திற்கும் அனுமதி தராமல் முட்டுக்கட்டை போட்டு வருவது. மும்மொழித் திணிப்பு என்ற பெயரில் தமிழ்மொழியை அழிக்கத் துடிப்பது, கீழடி அகழ்வாய்வு முடிவுகளை ஏற்க மறுப்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு.” என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.