மு.க.ஸ்டாலின் வீடியோவில் குரலை மாற்றி த.வெ.க. அட்டகாசம் - தி.மு.க. கண்டனம்

தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
Published on: 

”கேடுகெட்ட த.வெ.க ஆட்சியில் கள்ளத்தனமான வேலைகளே தொடர்ந்து நடைபெறுகின்றன. இந்த ஆட்சியில் அன்றாடம் தொடரும் அவலங்களுக்கு எதிராக தி.மு.க மகளிரணி நடத்தும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக நேற்று கழகத் தலைவர் பதிவிட்ட வீடியோவில், அவருடைய குரலை மட்டும் மாற்றி, அருவருக்கத்தக்க அவதூறுக் கருத்துகளை த.வெ.க.வின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டு, தாங்கள் எவ்வளவு கேடுகெட்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியிருந்தார்கள்.” என்று தி.மு.க. கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து தி.மு.க.வின் தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ பொதுமக்களிடம் தவறான கருத்துகளைப் பதிய வைக்கும் த.வெ.க.வின் இந்தக் கள்ளத்தனமான செயல்பாடுகள் குறித்து கழக சட்டத்துறை இணைச் செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான இ.பரந்தாமன் தமிழ்நாடு காவல்துறையிடம் புகார் மனு அளித்திருக்கிறார். குற்றவியல் சட்டப் பிரிவுகள், தகவல்தொழில்நுட்ப சட்டப் பிரிவுகள், சைபர் கிரைம் சட்டப் பிரிவுகள் ஆகியவற்றின் கீழ் இந்தக் கள்ளத்தன வீடியோவைப் பதிவு செய்தவர்கள் மற்றும்அதற்கு மூளையாக செயல்பட்டவர்கள் உள்ளிட்ட அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவல்துறை பாரபட்சமின்றியும் அதிகாரத்திற்கு வளையாமலும் தன் கடமையைச் செய்யும் என எதிர்பார்க்கிறோம்.

அரசியல் மாண்போ, அறிவோ இல்லாத கூட்டத்திடம் தமிழ்நாடு சிக்கி சின்னாபின்னமாகி வரும் நிலையில், பொதுமக்கள் பக்கம் நின்று அதைத் தட்டிக் கேட்டும் வலிமையுள்ள ஒரே இயக்கமான தி.மு.க.வை தனது இழிசெயல்களால் சிறுமைப்படுத்த நினைக்கும் த.வெ.க.வின் முயற்சிகள் அனைத்தும் உறுதியான சட்ட நடவடிக்கைகளால் முறியடிக்கப்படும். அதற்கான நடவடிக்கைகளை காவல்துறை மூலம் மட்டுமின்றி, நீதிமன்றம் வாயிலாகவும் திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து மேற்கொண்டு வெல்லும்.” என்று கூறப்பட்டுள்ளது.