திமுகவும் பேசவில்லை… நாங்களும் நெருக்கடி தரவில்லை..! - திருமா

விசிக தலைவர் தொல். திருமாவளவன்
விசிக தலைவர் தொல். திருமாவளவன்
Published on

“கூட்டணிக்குள் பாமகவை இணைப்பது பற்றி திமுகவும் அதிகாரபூர்வமாக ஏதும் பேசவில்லை. நாங்களும் எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை.” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.

புதுவை வில்லியனூர் ஜி.என். பாளையம் பேட் ஸ்ரீ குழந்தை முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சட்டமன்றத் தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக சார்பில் குழு நியமித்து கூட்டணி கட்சிக்கு அழைப்பு விடுவார்கள். அப்போது அவர்களுடன் நாங்கள் பேசி எங்களுக்கான தொகுதிகளை முடிவு செய்வோம். ஒவ்வொரு தேர்தலிலும் நாங்கள் போட்டியிடுகின்ற தொகுதிகளுடைய எண்ணிக்கையை உயர்த்த வலியுறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்திருக்கிறோம். அதேபோல் இந்த முறையிலும் கூடுதலான இடங்களில் போட்டியிட விரும்புகிறோம். அந்த விருப்பத்தை பேச்சுவார்த்தையில் வெளிப்படுத்துவோம்.

பாமக நிறுவனர் ராமதாஸ் மீது மிகுந்த மரியாதை உண்டு. தைலாபுரம் தோட்டத்துக்கு அழைத்து பல மணி நேரம் உரையாடி உணவு அவரே பரிமாறி உள்ளார். உடல் நலனில் அக்கறை செலுத்த அறிவுறுத்தி உள்ளார். அவர் மீது கொண்டுள்ள அன்பு, மதிப்பில் மாற்றுக்கருத்துக்கோ இரண்டாம் கருத்தோ இல்லை. அரசியல் ரீதியாக அவர் 2011க்கு பிறகு எடுத்த முடிவுகள் எங்களுக்கு மட்டுமல் பெரியார், மார்சியக்க இயக்கத்தினருக்கும் அனைத்து தரப்புக்கும் அதிர்ச்சி தந்தது.

வெறுப்பு அரசியலை முன்னெடுப்பதால், பாஜக, பாமக கட்சிகள் இடையே தேர்தல் உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று உறுதியான முடிவை எடுத்து உள்ளோம். இது கொள்கை சார்ந்த முடிவு.

இதனால் எங்களுக்கு ஒரு சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கிடையாது. திமுக கூட்டணியில் பாமக இணைவது தொடர்பாக நாங்கள் எந்த நெருக்கடியும் தரவில்லை. கூட்டணியில் பாமகவை சேர்த்துக் கொள்வோம் என்று திமுகவும் அதிகாரபூர்வமாகவும் எங்கும் தெரிவிக்கவில்லை.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com