தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்
தி.மு.க. தலைமையகம் அண்ணா அறிவாலயம்

நெருங்கும் தேர்தல்… வார் ரூம் அமைத்த தி.மு.க.!

மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தி.மு.க. சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலை சந்திக்க அனைத்து அரசியல் கட்சிகளும் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளன.

இந்தநிலையில் மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க திமுக சார்பில் வார் ரூம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தொகுதி பார்வையாளர்கள் ஒருங்கிணைப்பு, பூத் கமிட்டி மேலாண்மை, பரப்புரை மேற்பார்வை ஆகிய பணிகளுக்காக, அக்கட்சியின் இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதுமட்டுமின்றி, ஊடக விவாதக்குழு மேலாண்மை, நட்சத்திர பேச்சாளர்கள் பரப்புரை மேலாண்மை ஆகியவற்றிற்காக துணை அமைப்புச் செயலாளர் ஆஸ்டின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல சட்டக்குழு மற்றும் தேர்தல் ஆணையம் சார்ந்த பணிகளுக்காக என்.ஆர் இளங்கோ பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோன்று தேர்தல் வழக்குகள், தேர்தல் ஆணையத்தில் கோரிக்கைகள் மற்றும் சட்டப்பூர்வ அனுமதிகள் பெறுவது போன்ற பணிகளுக்காகவும் தனித்தனியாக பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா ஒரு வார் ரூம் அமைக்கப்படும் என்றும் தி.மு.க. அறிவித்துள்ளது.

ஏற்கெனவே மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும், தொகுதிப் பங்கீடு குறித்து பேசவும், தேர்தல் அறிக்கை தயார் செய்யவும் 3 குழுக்களை திமுக அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com