ஆராவமுதன்
ஆராவமுதன்

தி.மு.க. நிர்வாகி குண்டு வீசிக் கொல்லப்பட்டது எப்படி?- 5 பேர் சரண்!

Published on

சென்னை அருகே தி.மு.க. பிரமுகர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேர் சரணடைந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஆராவமுதன்(56). இவர் வண்டலூர் மேம்பாலம் அருகில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவை ஏற்பாடு செய்திருந்தார். அதைப் பார்வையிடுவதற்காக நேற்று இரவு தனது காரில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கும்பல், அவரின் கார் மீது நாட்டு வெடிகுண்டி வீசியது. அதில், அவரின் கார் கண்ணாடி உடைந்து, அவரும் காயமடைந்தார்.

மயங்கிய நிலையில் இருந்த ஆராவமுதனை அந்தக் கும்பல் இழுத்துப் போட்டு சரமாரியாக வெட்டியுள்ளது. அதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழு, அவரின் இடது கை துண்டானது. இதனையடுத்து அந்தக் கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

இந்த சம்பவம் பற்றி காட்டுத்தீயாக தகவல் பரவவே, தி.மு.க. நிர்வாகிகளும் பொதுமக்களும் அங்கு திரண்டனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த ஆராவமுதனை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து வண்டலூர் ஓட்டோரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். ஆராவமுதன் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தையடுத்து அமைச்சர் தா.மோ அன்பரசன், தாம்பரம் போலீஸ் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் அங்கு வந்து விசாரித்தனர். சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் காவல்துறையினர் ஆய்வு செய்தனர். கொலையாளிகளைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சி.சி.டி.வி., செல்போன் சிக்னல் மூலம் கொலையாளிகளை அவர்கள் தேடிவந்தனர்.

இந்நிலையில், ஆராவமுதன் கொலை வழக்கு தொடர்பாக சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் 5 பேர் சரண் அடைந்தனர். தகவலை அறிந்த ஓட்டேரி காவல்நிலையத்தினர் அங்கு சென்றுள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்தால்தான், இந்தக் கொலைக்கான முழு விவரம் தெரியவரும் என போலீஸார் தெரிவித்தனர்.

இந்தக் கொலை திட்டமிட்டு செய்யப்பட்டது என்றும், இதன் பின்னணியில் பிரபல ரவுடி ஒருவர் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com