மக்களவைத் தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளர் நேர்காணல் நாளைமறுநாள் நடைபெறும் என அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
இதில் விண்ணப்பித்தவர் தங்களுடன் யாரையும் கூட்டிவரக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
“ நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட விரும்பி தலைமைக் கழகத்திற்கு விண்ணப்பம் தந்துள்ளவர்களை கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின், வருகிற 10-3-2024. ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நேர்காணல் வாயிலாக சந்தித்து தொகுதி நிலவரம் வெற்றி வாய்ப்புகள் குறித்து ஆராய்ந்து அறிந்திட இருக்கிறார்.
இந்நேர்காணலின்போது, அந்தந்த நாடாளுமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் மட்டுமே இந்நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.
வேட்புமனு அளித்தவர்கள், தங்களுக்கான ஆதரவாளர்களையோ - பரிந்துரையாளர்களையோ அழைத்து வரக்கூடாது என்றும், அவர்களையெல்லாம் நேர்காணலுக்கு கண்டிப்பாக அனுமதிக்க இயலாது என்றும் தெரிவிக்கப்படுகிறது.” என்று துரைமுருகன் கூறியுள்ளார்.