திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா… - இபிஎஸ் கிண்டல்

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி
Published on

திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா என்று அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கிண்டலாக விமர்சித்தார்.

தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழக சட்டமன்றத்தில் காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த இருமல் மருந்தை உட்கொண்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த 25 குழந்தைகள் மரணம் அடைந்தது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தோம். சென்னைக்கு அருகே உள்ள தனியார் மருந்து நிறுவனம் தயாரித்த கோல்ட்ரிப் மருந்து இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அக்டோபர் மாதம் 1-ம் தேதி மத்திய பிரதேச மருந்து கட்டுப்பாட்டுத் துறை தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறைக்கு ஒரு அவசர கடிதம் அனுப்பியுள்ளது.

தமிழக அரசு 3.10.2025 அன்று, அந்த மருந்து நிறுவனம் மிகப்பெரிய தவறு இழைத்ததாக கூறி உற்பத்தியை நிறுத்துமாறு தடை விதித்துள்ளது.

7.10.2025 அன்று மத்தியப் பிரதேச சுகாதாரத்துறை அமைச்சர் நரேந்திரசிவாஜி படேல், தமிழக சுகாதாரத் துறை மிக அலட்சியமாக செயல்பட்டதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். அதோடு அந்த மருந்து நிறுவனத்தின் உரிமையாளரான சென்னை அசோக்நகரை சேர்ந்த ஜி.ரெங்கநாதனை மத்திய பிரதேச போலீஸ் கைது செய்தது. பின்னர் 15ம் தேதி ஸ்ரீசன் பார்மசியூட்டிகள் நிறுவனத்தின் உற்பத்தி தடை செய்யப்பட்டது. அந்த நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை செய்கிறார்கள். இதையடுத்தே தமிழ்நாடு அரசின் மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி இடைநீக்கம் செய்யப்படுகிறார்.

உலக சுகாதாரத்துறை நிறுவனம் இந்த கோல்ட்ரிப் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என எச்சரித்துள்ளது. எனவே, குழந்தைகளுக்கு மருந்து தயாரிக்கும் அந்த நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து கண்காணித்திருக்க வேண்டும். தமிழ்நாடு அரசின் அலட்சியத்தின் காரணமாக குழந்தைகள் உயிரிழப்பு நிகழ்ந்திருக்கிறது.

அதேபோல், கிட்னி முறைகேடு குறித்து நான் சட்டமன்றத்தில் கேட்ட கேள்விக்கு சாரியான பதில் கிடைக்கவில்லை. புரோக்கரைத்தான் கைது செய்திருக்கிறார்கள். எந்த மருத்துவமனையில் முறைகேடாக கிட்னி அறுவை சிகிச்சை செய்தார்களோ அந்த மருத்துவமனை மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திமுக எம்எல்ஏவின் சொந்த மருத்துவமனை என்பதால் இந்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை உயர்நீதிமன்றக் கிளை சிறப்பு விசாரணைக் குழு அமைத்துள்ளார்கள். அந்த தீர்ப்பின் அடிப்படையில் அரசு செயல்படவில்லை. அவர்களுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மருத்துவமனையில் சோதனை செய்து அறிக்கையை கொடுத்தது திமுக அரசு தான். ஆனால் நடவடிக்கை எடுக்காமல், இருப்பதும் அவர்கள் தான். கிட்னி முறைகேட்டில் யாரெல்லாம் முறைகேடு செய்தார்களே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் நெல் மூட்டைகள் நேரடியாக கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படவில்லை. இதனால் 30 லட்சம் மூட்டைகள் சாலைகளில் குவிக்கப்பட்டுள்ளது. நெல் மணிகள் மழையில் நனைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். மழை வருவதால் நெல் முளைக்க தொடங்கி விடும். ஈரப்பதம் 20 முதல் 22 சதவீதம் வரை கொள்முதல் செய்ய மத்திய அரசிடம் அனுமதி பெற்று அதிமுக அரசு கொள்முதல் செய்தது. இதையெல்லாம் இந்த அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. விவசாயிகள் கடும் துன்பத்திற்கும் வேதனைக்கும் ஆளாகி உள்ளனர்.

திமுக தனது தேர்தல் அறிக்கையில் தமிழகத்தின் நிதி மேலாண்மை சரி செய்யப்படும் என்று சொல்லியிருந்தது. நிதி மேலாண்மை குழு அமைக்கப்படும் என்று கூறியிருந்தது. நிபுணர் குழுவை அவர்கள் அமைத்த பிறகு கடன் வாங்கியதுதான் அதிகமாக இருக்கிறது. 73 ஆண்டுகளில் வாங்கிய கடனை விட, இந்த ஆட்சியில் நான்கரை ஆண்டு காலத்தில் 4 லட்சத்து 50 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு வந்திருக்கிறது. சாத்தூர் நகராட்சியில் ஓய்வுபெற்ற ஒரு அரசு ஊழியர் தனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில் சாத்தூர் நகராட்சி கமிஷனர் அளித்த விளக்கத்தில் 18 மாதம் கழித்து ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஏன் அவ்வளவு காலம் என்று நீதிபதி கேட்டதற்கு, ‘நகராட்சியில் நிதி இல்லை’ என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

அதற்கு நீதிபதி, “ஓய்வூதியம் என்பது பரிசல்ல. அது வாழ்நாள் முழுதும் உழைத்தற்கான பெறப்ப்பபடும் உரிமை. அவருக்கு ஓய்வூதியம் கொடுக்கும் வரை அதிகாரிகள் சம்பளம் பெறக்கூடாது’’ என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஓய்வூதியம்கூட கொடுக்க முடியாத அரசு எப்படி மக்களை காக்கப் போகிறது?

தொழில்துறை அமைச்சர் ஃபோக்ஸ்கான் நிறுவனம் தமிழகத்தில் 15 ஆயிரம் கோடி முதலீடு செய்யவுள்ளதாக கூறினார். ஆனால் அந்த நிறுவனம் அதை மறுத்துள்ளது. இதுதொடர்பான விவாதம் சட்டமன்றத்தில் வந்தபோது தொழில்துறை அமைச்சர், “ஃபாக்ஸ்கானில் பல துணை நிறுவனங்கள் இருக்கின்றன. அதில் ஒரு நிறுவனம்தான் தமிழகத்தில் முதலீடு செய்யப்போவதாகச் சொல்கிறார். அப்படியென்றால் ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனம் எது என்று சொல்லுங்கள். எல்லாமே வெற்று அறிவிப்பு. அத்தனையும் பொய் அறிவிப்பு.

முதல்வர் ஜெர்மனிக்குச் செல்லும்போது செய்தியாளர்களிடம், ‘10 லட்சத்து 62 ஆயிரம் கோடி முதலீடு பெற்றுள்ளதாகச் சொன்னார். 77 சதவீதம் புரிந்துணர்வு ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும் சொன்னார். அப்படி நிறைவேற்றப்பட்டிருந்தால் 25 லட்சம் பேருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால் அப்படி எந்த சம்பவமும் தமிழகத்தில் நடந்ததாகத் தெரியவில்லை. பெரிய தொழில் வர 3 ஆண்டுகள் ஆகும். ஆனால் தமிழக முதல்வர் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவுடனே தொழில் தொடங்கியதாக தவறான கருத்தைத் தெரிவிக்கிறார். சுமார் 60 ஆயிரம் கோடிதான் தமிழகத்துக்கு முதலீடு வந்துள்ளதாக மத்திய அரசு அறிக்கை கொடுத்துள்ளது.

சமீபத்தில் தருமபுரிக்குச் சென்ற முதல்வர் இனி விவசாயிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்துக்குப் போய் மனு கொடுக்க அவசியம் இல்லை. ஆன்லைன் மூலம் பயிர்க்கடன் வாங்கலாம் என்று அறிவித்தார். இதுவரை 4,400 கூட்டுறவு சங்கத்தில் இந்த முறை பின்பற்றப்படவில்லை. மக்களை ஏமாற்றுவதுதான் இந்த அரசின் வேலை.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

பின்னர் உருட்டுக்கடை அல்வா பாக்கெட் எடுத்துக் காட்டியபடி பேசிய இபிஎஸ், “திமுக ஆட்சி என்பது உருட்டுக்கடை அல்வா… இந்த அரசாங்கத்தில் இப்படிப்பட்ட அல்வாதான் கிடைக்கும். கடந்த 2021ம் ஆண்டில் தீபாவளியின்போது 525 அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின். அதில் 10% அறிவிப்பை கூட நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் அல்வா கொடுத்துவிட்டார். இந்த உருட்டுக்கடை அல்வாவை பிரிச்சுப் பாருங்க… எப்படி டேஸ்டா இருக்குதான்னு சொல்லுங்க’என்று கிண்டலாக கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com