
நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவுள்ள தொகுதி மறுவரையறை மசோதாவில் அனைத்து மாநிலங்களுக்கும் 50% உயர்வு வழங்குவதால் தி.மு.க. ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று நடைபெற்ற தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
"இப்போது எழுந்துள்ள தொகுதி மறுவரையறை விவகாரத்தில், தி.மு.க. தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டுவதில் உறுதியாக இருக்கிறது.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் 14.2.2024 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், "தவிர்க்க இயலாத காரணங்களினால் மக்கள்தொகை அடிப்படையில் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டால், 1971-ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தற்பொழுது மாநிலச் சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கு இடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளதோ அதே விகிதத்தில் தொடர்ந்து இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினோம். கடந்த 5.3.2025 அன்று நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்திலும் இதையே நிலைநாட்டினோம்.
தொகுதி மறுவரையறையின் காரணமாக நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது" என்பதை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றினோம்.
"தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையில் தற்போதுள்ள 7.18 விழுக்காடு பிரதிநிதித்துவம் குறையக்கூடாது, 1971 மக்கள் தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எவ்வித மாற்றமும் செய்யப்படக்கூடாது” எனும் தமிழ்நாட்டின் உரிமையை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தொடரிலும் வலியுறுத்தி, தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ உரிமையை பாதுகாக்கவும், தென்மாநிலங்களின் நலனை நிலைநாட்டிடவும் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் முனைப்போடு செயல்படுவார்கள்." என்று இன்று நடைபெற்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.