சட்டப்பேரவையில் இன்று காலை 9:30 மணிக்கு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியது.
சட்டப்பேரவையில் நேற்று பேசிய முதலமைச்சர் விஜய் விதிமுறைகளை மீறிப் பேசியதால், சிலவற்றை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை தி.மு.க. கொறடா எ.வ வேலு, சபாநாயகரிடம் முன்வைத்தார்.
நீதிவிசாரணையில் உள்ளவற்றை பற்றியும், அவையில் இல்லாதவர்களை பற்றியும் முதலமைச்சர் பேசியவற்றை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் எ.வ வேலு கூறினார்.
இதுகுறித்து அவர் பேசியதாவது:
"அமலாக்கத் துறை அரசின் சார்பில் சமர்ப்பித்த ஆவணம் குறித்த வழக்கானது நீதிமன்றத்தில் இருக்கும் அதனை முதலமைச்சர் ஆதாரமாகக் காட்டலாமா?
சர்க்காரியா கமிஷனில் இவர்கள்தான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்படாத நிலையில், அதை வைத்து தி.மு.க. மீது குற்றம் சுமத்துவது ஏன்? அரசியல் ஆதாயத்திற்காகவா?
மறைந்த முரசொலி மாறன் பற்றி பேசவேண்டிய அவசியம் என்ன?" ஆகிய மூன்று முக்கிய கேள்விகளை எ.வ வேலு முன்வைத்தார்.
தி.மு.க.வினரின் கோரிக்கையை ஏற்க மறுத்த சபாநாயகர், முதலமைச்சர் பேசியதை அவைக்குறிப்பிலிருந்து நீக்க முடியாது என்று தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, சபாநாயகரின் இருக்கை முன்பு கூடிய எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, சபாநாயகரின் உத்தரவின்பேரில் அமளியில் ஈடுபட்ட தி.மு.க.வினர் குண்டுக்கட்டாக சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.