அந்திமழை நிறுவனரும் நிறுவிய ஆசிரியருமான மருத்துவர் அந்திமழை ந.இளங்கோவன் நேற்று (ஜீலை 28) அதிகாலையில் இயற்கை எய்தினார். அவரின் மறைவுக்கு பத்திரிகையாளர்கள், இலக்கியவாதிகள், அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் இளநிலை கால்நடை மருத்துவப் பட்டப்படிப்பு முடித்த என். இளங்கோவன், அப்போது இரண்டு விருப்பங்களை கொண்டிருந்தார். ஒன்று இதழியலில் ஈடுபடுவது. மற்றொன்று தொழிலதிபர் ஆவது.
தன்னுடையை கனவுகளைப் பின்தொடர்ந்து பெரும் தொழில் முனைவோர் ஆனதுடன் தொழில்முனைவு குறித்த ‘கரன்சி காலனி’ என்ற நூலையும் வெளியிட்டுள்ளார். இது ஆங்கிலம், மலையாளம், இந்தி மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
அந்திமழை இளங்கோவன், படிப்பை முடித்த கையோடு கர்நாடக மாநிலம் ஹூப்ளியில், யூனிகெம் லேபரட்டரீஸ் நிறுவனத்தின் கால்நடை மருந்துப் பொருட்கள் பிரிவின் விற்பனை அலுவலராக மாதம் ரூ.1,900 சம்பளத்தில் தன்னுடைய முதல் பணியைத் தொடங்கினார்.
16 வயதிலேயே டெக்ஸ்டைல் வர்த்தகத்தில் ஈடுபட நினைத்த அவரின் யோசனைக்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே,
தொடர்ந்து படிப்பில் கவனம் செலுத்தினார்.
சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபோது, தனக்குள் இருந்த எழுத்து மீதான ஆர்வத்தைக் கண்டுபிடித்தார். இந்த ஆர்வம்தான் அவர் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும்போதே இதழியல் பக்கம் திருப்பியது. அப்போது, இளங்கோவன், அந்திமழை என்ற கையெழுத்துப் பிரதியை தொடங்கினார்.
இந்தக் கையெழுத்துப் பிரதியில் வெளியான படைப்புகள் சில வெகுஜன இதழ்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. இந்த இதழ் கல்லூரி மாணவர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
1994ஆம் ஆண்டு பட்டப்படிப்பு முடித்ததும், இதழியல் பணிக்குச் செல்ல விரும்பினார் இளங்கோவன். ஆனால், குடும்பத்தினரின் கருத்துக்கேற்ப யூனிகெம் லேபரேட்டரீஸ் நிறுவனத்தின் விற்பனைப் பிரிவில் வேலைக்குச் சேர்ந்தார்.
பதினாறு மாதங்களுக்குப் பிறகு, தமிழகத்தில் நாமக்கல்லைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட செல்வம் பிராய்லர்ஸ் நிறுவனத்தில் கர்நாடக மாநிலத்திற்குப் பொறுப்பாளராகச் சேர்ந்தார்.
இரண்டு ஆண்டுகள் கழித்து, ஃபார்சூன் 500 பட்டியலில் இடம்பிடித்த ஃபோர்ட் டோட்ஜ் என்ற கால்நடை உயிரியியல் நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். தமிழ்நாடு- கேரள விற்பனை மற்றும் தொழில்நுட்ப வணிகப் பிரிவில் பணியாற்றினார்.
இதற்கிடையே சென்னையிலிருந்து வெளிவரும் குமுதம், தமிழன் எக்ஸ்பிரஸ், குங்குமம் ஆகிய முன்னணி இதழ்களில் எழுதி, தனது எழுத்து ஆர்வத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தார். இதழியல் மீதான அவரது ஈர்ப்பு மிகவும் தவிர்க்கமுடியாததாக ஆனது.
1999ஆம் ஆண்டு விண்நாயகன் என்ற மாதம் இருமுறை இதழில் முழுநேர இதழாளராகப் பணியில் சேர்ந்தார். அங்கு இவருக்கு முன்னைய சம்பளத்தில் 25 சதவிகிதம் மட்டுமே கிடைத்தது.
ஓர் ஆண்டு காலத்துக்குள் விண்நாயகன் இதழ் மூடப்படும் நிலையில் இருந்ததால், அதிலிருந்து விலகினார். பெங்களூருவுக்குத் திரும்பிவந்தவர், மீண்டும் கால்நடைகள் தொடர்பான ஒரு தொழில் நிறுவனத்தில் சேர்ந்தார்.
அதற்கடுத்த ஆண்டு, அவர் இண்டோபையோகேர் என்ற கால்நடை சுகாதாரத் தொழில் நிறுவனத்தில் பெங்களூரில் வேலையில் சேர்ந்தார். தேசிய வணிகத் தலைவராக பணி உயர்வு அளிக்கப்பட்டு பரோடா நகருக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு 2004ஆம் ஆண்டு அவரது எதிர் வீட்டில் இருந்த ஒருவருடனான நட்பின் மூலம் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டது.
அப்போதுதான் அவருக்குள் செயலற்ற நிலையில் இருந்த தொழில்முனைவு விருப்பம், மீண்டும் உயிர்பெற்றது.
2007ஆம் ஆண்டு இளங்கோவன் தனது கனவான ஐரிஸ் சொல்யூஷன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை தன் சேமிப்பில் இருந்த 16 லட்சம் ரூபாய் முதலீட்டில் தொடங்கினார்.
நூறு பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்ற உயர்ந்த சிந்தனையில் நிறுவனத்தைத் தொடங்கியவர், ஆரம்பத்தில் நாய்களுக்கான அழகுசாதனப் பொருட்கள், ஷாம்பு வகைகள், நாய்களுக்கான பிஸ்கட் வகைகள் ஆகியவற்றைச் சந்தைப்படுத்தினார்.
பின்னர் 2008ஆம் ஆண்டு தன் நண்பர் ஒருவர் நடத்திவந்த வேபா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தைக் கையகப்படுத்தியதன் மூலம் கோழிப் பண்ணைகளுக்கான இணை உணவுப் பொருட்களை சந்தைப்படுத்தினார் இளங்கோவன்.
அதே ஆண்டில் பெங்களூரு பொம்மனஹள்ளியில் ஐரிஸ் நிறுவனத்தின் உற்பத்திப் பிரிவு தொடங்கப்பட்டது.
“தொழில் லாபகரமாக நடந்தாலும் சரி, லாபம் இல்லாமல் இருந்தாலும் சரி 1000 நாட்கள் தொடர்ந்து நடத்துவது என்ற வலுவான தீர்மானத்துடன் இருந்தேன். ஆயிரமாவது நாளை கடக்கும்போது, அதனை நான் விரிவாக்கினேன். இன்னொரு 1000 நாள்களை இலக்காக வைத்தேன். இப்படித்தான் இது நகர்ந்தது,” என்று ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.
அதே பேட்டியில், சிரமமான சூழல்கள் பற்றி நினைவுகூரும் இளங்கோவன், "வெற்றிகரமான வேலையில் இருந்து விலகியது தவறான முடிவோ என்று பல முறை வருந்தியிருக்கிறேன். அது போன்ற தருணங்களில், வெற்றிபெற்ற நபர்கள், தொழில் முனைவோர்களின் வாழ்க்கை வரலாற்றை நான் படிப்பேன். அதன்மூலம் எனக்கு நானே உந்துதல் பெற்றேன். மானுத்துக்கு கூடுதல் மதிப்பு தர வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன். என்னுடைய நிறுவனங்களின் வெற்றிக்கு என்னுடைய பணியாளர் குழு, வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் காரணம்," என்கிறார்.
இளங்கோவன், தமிழகத்தின் தென் மாவட்டமான திருநெல்வேலியைச் சேர்ந்த நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்தவர். ‘கரன்சி காலனி’,’ஊர்கூடி இழுத்த தேர்’ ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.