
நீட்தேர்வு இரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தின் மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் ஆறு கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச்செயலாளர், டாக்டர் காசி வெளியிட்டுள்ள அறிக்கை :
” கடந்த 3ஆம் தேதி அன்று அகில இந்திய அளவில் இளங்கலை மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற்ற நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்திய அளவில் சுமார் 22 இலட்சம் மாணவர்கள் நீட் தேர்வை எழுதியிருந்த நிலையில் , இராஜஸ்தான் மாநிலத்தில் தேர்வுத்தாள் கசிந்ததன் காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. பல்வேறு பொருளாதார, குடும்ப கஷ்டங்களுக்கு இடையே தேர்வு எழுதிய இலட்சக்கணக்கான மாணவா்களுக்கு அதிரச்சியையும் மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. தேர்வுக்கான மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு பல தில்லுமுல்லு, குழப்பங்களுக்கு இடையில்தான் நடந்து வருகிறது. இது ஒன்றிய அரசின் தேசிய தேர்வு முகமையின் கையாலாகாததனத்தையே காட்டுகிறது .”ஒரே நாடு ; ஒரே தேர்வு “என்ற முழக்கத்துடன் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இதுதான் நிலைமை .
1) முறையாக தேர்வு நடத்த இயலாத தேசிய தேர்வு முகமையைக் (NTA) கூண்டோடு கலைக்க வேண்டும்.
2) நீட் தேர்வை முற்றிலுமாக இரத்து செய்ய வேண்டும். அதுவரை தமிழ்நாட்டிற்கு நீட் -இளநிலை, முதுநிலை, உயர்சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்விலிருந்து முற்றிலும் விலக்கு அளிக்க வேண்டும்.
3) ஒன்றிய அரசு மருத்துவ நிறுவனங்கள், மருத்துவக் கல்லூரிகள், அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், தனியார் பல்கலைக்கழகங்கள், அகில இந்திய தொகுப்பிற்கான 15% இடங்கள் ஆகியவற்றிற்கு மட்டுமே நீட் தேர்வு அல்லது 2012-க்குமுன் நடத்தப்பட்ட அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வை (AIPMT) நடத்த வேண்டும்.
4) மாநிலங்கள் தங்கள் விருப்பப்படி நுழைவுத் தேர்வு அல்லது +2 தேர்வு அடிப்படையில் எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும் வகையில் தேசிய மருத்துவ ஆணையம் விதிமுறைகளை மாற்ற வேண்டும்.
5) தற்போது இரத்து செய்யப்பட்ட தேர்வை மீண்டும் நடத்தும்போது புதிய கட்டணங்களை வசூலிக்கக் கூடாது என்பதுடன் நடந்து முடிந்த தேர்விற்காக ஒவ்வொரு மாணவரும் செலவுசெய்த தொகையைத் (தேர்வு கட்டணம் தவிர) திருப்பித்தர வேண்டும்.
6) ஒவ்வொரு வருடமும் நீட் தேர்வின் பெயரால் மாணவர்களை வஞ்சிக்கும் போக்கை ஒன்றிய அரசு கைவிட்டு மேற்கூறிய ஆலோசனைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்று மக்கள் நல்வாழ்விற்கான மருத்துவர் அரங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.