மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு பிரதமருக்கு யோக்கியதை உண்டா? – முதல்வர் ஸ்டாலின் காட்டம்!

ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு பிரதமர் மோடிக்கு யோக்கியதை உண்டா என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் இல்லத் திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் திமுகவுக்கும் எப்போதும் அன்பும் நட்பும் உண்டு. கலைஞர் அடிக்கடி பெருமையோடு சொல்வார், தந்தை பெரியாரை, அறிஞர் அண்ணாவை நான் சந்திக்காமல் இருந்திருந்தால் தான் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருந்திருப்பேன் என்பார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணி தொடரும்.” என்றார்.

”பாசிச, சர்வாதிகார ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிற பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டைக் காப்பாற்றி விட்டோம். இந்தியாவை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. அதனால் தான் இந்தியா கூட்டணியை உருவாக்கினோம்.

ஒன்பது வருடமாக பாஜகவின் ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்த ஒன்பது வருடத்தில் மக்களுக்கு எதாவது நன்மைகள் செய்திருக்கிறார்களா பாஜகவினர்.

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் தரப்படும் என்றார்கள். இதுவரை ஒரு பைசா கூட தரவில்லை. அதேபோல், 2 கோடி வேலை வாய்ப்பு தருவோம் என்றார்கள். தந்தார்களா? வேலை இழப்புதான் ஏற்பட்டிருக்கிறது.

மதக்கலவரங்கள் மூலமாக நாட்டை இரண்டாகப் பிரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணி. இந்த கூட்டணியை பிரதமரால் பொருத்துக் கொள்ள முடியவில்லை. தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டதாகக் கடந்து 9 வருடமாக பிரதமர் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஊழலை ஒழித்தே தீருவேன் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடியைப் பார்த்து நான் அடக்கத்துடன் கேட்க விரும்புகிறேன், ஊழலைப் பற்றிப் பேசுவதற்கு யோக்கியதை பிரதமர் மோடிக்கு உண்டா?

மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை என்ன சொல்லுகிறது. இது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கிற அமைப்பு. மத்தியில் நடைபெறுகிற பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் உள்ள ஆட்சி. லஞ்ச லாவண்யம் அதிகம் உள்ள ஆட்சி. ஏழு ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது” என்றவர், மத்திய தணிக்கை குழு ஊழல் தொடர்பாக வெளியிட்ட புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com