TVK Flag
தமிழக வெற்றிக் கழக கொடி

மன்னர் ஆட்சியை ஆதரிக்கிறாரா விஜய்?

Published on

பொதுவாக டிரெய்லருக்காதான் டிகோடிங் செய்வார்கள். ஆனால், நேற்று தவெகவின் கொடியை வைத்து யூடியூபர்ஸ் செய்த டிகோடிங் ஆச்சரியப்பட வைத்தது.

விஜய் கட்சியின் கொடி ஸ்பெயின் கொடி மாதிரி இருப்பதாகவும் கேளர அரசின் போக்குவரத்துத் துறை சின்னம் மாதிரி இருப்பதாகவும் கூறினார்கள்.

இந்த டிகோடிங்கிலிந்து வித்தியாசமான பார்வையை முன்வைத்துள்ளார் எழுத்தாளர் கௌதம சித்தார்த்தன். இது தொடர்பாக அவர் தனது முகநூலில் எழுதியுள்ள பதிவு:

“கொடி நன்றாகத்தான் இருக்கிறது. அதுமாதிரி இது மாதிரி என்று கிண்டலடிப்பவர்களின் கூற்றையும் ஏற்றுக் கொள்ளலாம். இந்தக் களேபரம் இன்னும் பரவலாகக் கொண்டு போய்ச் சேர்க்கும்.

கொடி சங்க காலத்து நினைவுகளை எனக்குள் கிளர்த்தி விட்டது. அரசர்களின், பேரரசர்களின் பதாகையை போல கம்பீர்யமாக அசைகிறது. அந்த அசைதலில் சேர. சோழ, பாண்டிய, பல்லவ... மன்னவர்கள் குதிரைகளில் பாய்ந்துவரும் குளம்பொலிகளும், கனைப்பொலிகளும் கேட்கின்றன. வாகைமலர் சூடி போருக்குப் புறப்படும் சிற்றரசர்களின், பேரரசர்களின் மார்பில் "வெற்றிவேல் வீரவேல்" என்று ஓங்கி ஒலிக்கின்றன.

இதுவரையிலான அரசியல் கட்சிகளின் கொடி போல் இல்லாமல் முற்றிலும் விலகி நின்று வித்தியாசமாகத்தான் முயற்சி செய்திருக்கிறார் விஜய். (பகுஜன் சமாஜ் பார்ட்டியில் இருக்கும் ஒற்றை யானைக்கும் இந்த ரெட்டை யானைகளுக்கும் பெரிய வித்தியாசமிருக்கிறது.) இந்த ரெட்டை யானை என்பது ஒரு கிளாசிக்கல் லோகோ. கடந்த 100 ஆண்டுகளாக தமிழ், தமிழ் சார்ந்த மன்னராட்சிகளின் பாரம்பரியத்தில் பட்டொளி வீசிப் பறக்கும் பதாகை!

ஆகவே கொடியின் மீது எனக்கு எவ்வித விமர்சனமும் இல்லை. ஆனால், எனக்கு வேறொரு விமர்சனம் உண்டு: அது அடிப்படையையே உலுக்கும் விமர்சனம்!

அதாவது, கடந்த மன்னராட்சிக் காலங்களில் முழுக்க முழுக்க பேரரசர்களும் சிற்றரசர்களும் போற்றிவந்த (ஒரு அரசாட்சியின் குறியீட்டுச் சின்னமாக விளங்கும்) இந்தக் கொடியை நீங்கள் ஏற்றுக் கொண்டது எதனால்? ஒரு கட்சியின் முகமாக இருப்பது, கட்சியின் கொள்கைகளை பறை சாற்றுவது கொடிதான். அப்படியெனில், நீங்கள் மன்னராட்சியை விரும்புகிறீர்களா? கடந்த 80 வருடங்களாக மன்னராட்சியின் சர்வாதிகாரங்களை ஒழித்து, மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதியை முன்னிறுத்தும் மக்களாட்சியை விரும்பவில்லையா?

இந்தக் கேள்வியை உங்களால் எதிர்கொள்ளும் பொழுது, " என்ன இப்படி மடத்தனமாகக் கேள்வி கேட்கிறீர்கள்? யாராவது மன்னராட்சியை விரும்புவார்களா? மக்களாட்சிதான் எங்கள் ஆட்சி.." என்று நீங்கள் கோபத்துடன் பதில் சொல்வீர்கள். ஆவேசமிகு சொற்களால் வெளிவரும் இந்த பதில் என்பது மேலோட்டமானது.

கனவு மனம், நனவு மனம், நனவிலி மனம் (Dream, Conscious Unconscious) என்று மூன்று அடுக்குகளாக மனித மனத்தைப் பிரிக்கிறார் உளவியலின் தந்தை சிக்மண்ட் ஃபிராய்டு.

"உங்களுக்கு மிகவும் பிடித்தமான விஷயங்கள் உங்களது ஆழ்மன அடுக்குகளில் உங்களையும் அறியாமல் பதிந்து கொள்ளும். நீங்கள் எதைச் செய்தாலும், அந்த நனவிலி மனத்தின் அடுக்குகளில் நீறு பூத்த நெருப்பாக இருக்கும் சொற்கள்தான் உங்களை வழி நடத்தும்" என்கிறான் ஃபிராய்டு.

ஆகவே, அடுத்த வாரத்தில், கொடியைப் பற்றிய விளக்கம் சொல்ல இருக்கும் நன்னாளில், இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு, உங்கள் சிந்தனையாளர் குழுவில் விவாதித்து சிறப்பானதொரு விளக்க உரையை, விஜய்ணா அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் "தமிழக முன்னேற்ற முன்னணி" என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது, அவரது கொடி இரு வர்ணங்களில் (மேலே வெள்ளை கீழே சிவப்பு) இருந்தது. கொடி அறிமுகத்தின் போது அதைப்பற்றி அவர் என்ன விளக்கம் தந்தார் என்று எனக்கு தெரியாது, அப்பொழுது எனக்கு 15 - 16 வயதிருக்கலாம்.

ஆனால், அப்பொழுது வெளிவந்த அவரது படமான "என் தமிழ் என் மக்கள்" படத்தின் கிளைமாக்ஸில் அற்புதமான படிமமாக அதற்கு ஒரு விளக்கக்காட்சியை அமைத்திருந்தார். அதாவது, படத்தில் வில்லன், ஏழைமக்கள் வாழும் குடிசைகளை ஒரு புல்டோசரை விட்டு இடித்துத் தள்ளுவான். குடிசைகள் நொறுங்கி சின்னாபின்னமாகும். மக்கள் இந்த இடிபாடுகளுக்கிடையில் மாட்டிக்கொண்டு இறந்து போவார்கள். அப்பொழுது ஒரு சின்னஞ்சிறு குழந்தை புல்டோசர் சக்கரத்தில் மாட்டிக்கொள்ளும் உடனே சிவாஜி அங்கு ஓடிப்போய் அந்தக் குழந்தையைத் தூக்குவார். குழந்தையின் உடலெங்கும் ரத்தம் பீறிட்டு வழியும். சிவாஜி தலையில் கட்டியிருந்த தனது துண்டை அவிழ்த்து அந்தக் குழந்தையை சுற்றி ரத்தப் பெருக்கை நிறுத்துவார். அங்கு கதறிக்கொண்டு ஓடிவரும் அந்தக் குழந்தையின் அம்மா, குழந்தையை வாங்கிக் கொள்ளும்.

சிவாஜி தனது துண்டை எடுத்து உதறுவார். அதில் ஒருபாதி ரத்தம் படிந்திருக்கும். ஒருபாதி வெண்மையாக இருக்கும். அவர் அந்தத் துண்டைஉயர்த்திப் பேசுவார்: "அநீதிக்கு எதிராக இந்தத் தோல் துண்டையே பதாகையாக மாற்றி என் தமிழ் மக்களுக்கான நீதியை நிலை நாட்டுவேன்.." என்று சூளுரைப்பார்.

அந்தச் சின்னஞ்சிறு வயதில் என் உடலெங்கும் இறுகிப்போய், கைகால் முடிகள் நெட்டுக் குத்தாய் விடைத்து நிற்க, ரத்த ஓட்டம் விரைந்தோட அந்தக் கணங்களை என்னால் விவரிக்க முடியவில்லை.

அந்தக்காட்சி, இன்று வரை எனக்குள் அழியாமல் இருக்கிற அற்புதத்தை நிகழ்த்தியது.

அப்படி ஒரு அற்புதத்தை நிகழ்த்த வேண்டும் விஜய்ண்ணா.!” என்று கெளதம சித்தார்த்தன் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் அரசியல் அலோசகர்கள் இந்த பதிவை கவனத்தில் கொள்ளலாம்!

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com